அ.தி.மு.க.வை குறை கூற ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசம்

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார்.

சங்க செயல்பாடுகள் எவ்வாறு நடைபெறுகிறது. எத்தனை பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் உள்ள 121 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பயிர் கடன் 6 ஆயிரம் கோடியாக இருந்ததை இந்த ஆண்டு ரூ. 7ஆயிரம் கோடியாக முதல்வர் பழனிசாமி உயர்த்தி உள்ளார்.

தமிழகத்தில் 5 முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. மக்கள் நலனுக்காக என்ன செய்தது? மாநிலத்தை குட்டி சுவராக்கி மீண்டும் ஆட்சியில் அமரவேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் துடிக்கிறார். ஊழலில் திளைத்தது தி.மு.க.

தற்போது அ.தி.மு.க. ஊழல் கட்சி என்று ஸ்டாலின் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

ஊழல் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. நடிகர் கமல்ஹாசன் பொதுவானவர். அவர் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்காமல் குறைகளை கூறட்டும்.

ஒட்டு மொத்தமாக எங்களை பற்றி பேசி தன்னைத் தானே தரம் தாழ்த்தி கொள்கிறார். நீட் தேர்வு, மீத்தேன் திட்டம், கெயில் திட்டம் எல்லாம் தி.மு.க.ஆட்சியில் தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு கொண்டு வரப்பட்டது.

இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

You might also like More from author