இந்தியாவுடனான வர்த்தக உறவை வலுப்படுத்த ஜெர்மன் தூதர் தெரிவித்துள்ளார்

இந்தியாவுடனான தனது வர்த்தக உறவை வலுப்படுத்த விரும்புவதாகவும் குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு துறைகளில் அதிகளவில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாகவும் ஜெர்மன் தூதர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் அச்சிம் பேபிக், தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை கடந்த சனிக்கிழமை சென்னையிலுள்ள ஆளுநர் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் இதுகுறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜெர்மனியில் முதலீடு செய்துள்ளன. அதேபோல, இந்தியாவின் ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஜெர்மனி அதிகமாக முதலீடு செய்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்டோமொபைல் துறையில், ஜெர்மனி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.

இந்தியாவுடனான வர்த்தக தொழிற்துறை உறவை வலுப்படுத்த ஜெர்மனி ஆர்வமாக உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிக்க ஜெர்மனி நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை தொழில்நுட்பங்கள், கல்வி பரிவர்த்தனை திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்ய, ஜெர்மனி நிறுவனங்கள் விரும்புகின்றன என அச்சிம் பேபிக் தெரிவித்தார். இந்தியாவில் ’மேக் இன் இந்தியா திட்டம்’, தொழில்நுட்ப மேம்பாட்டில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் ஆகிய காரணிகளால் உலக நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய அதிக ஆர்வம்காட்டி வருகின்றன. ஜெர்மனி தூதரின் இந்தச் சந்திப்பின்மூலம் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவு வலுப்பெறுவதோடு, முதலீடு மேற்கொள்ளும் துறைகள் குறித்தும் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com