இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு தமிழகம்தான்..

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டிலேயே 2வது இடத்தில் தமிழகம் உள்ளது என்கிறது இந்தியா டுடே ஊடகம் நடத்திய ஆய்வு.

நாட்டிலேயே மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக உள்ள முதல் 5 மாநிலங்கள் எவை என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது வர்த்தக தலைநகர் மும்பையை உள்ளடக்கிய மகாராஷ்டிராதான். தொழில்வளமும், வேளாண் வளமும் கொண்ட இந்த மாநிலம்தான் பட்டியலில் அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் முதலிடத்தில் உள்ளது.

மகாராஷ்டிராவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.16.6 லட்சம் கோடிகளாக உள்ளது. 2வது இடத்தில் இருப்பது தமிழ்நாடு. தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.9.48 லட்சம் கோடியாகும்.

3வது இடத்தை உத்தர பிரதேசத்துடன் இணைந்து பெறுகிறது குஜராத். இரு மாநிலங்களின் ஜிடிபி ரூ.9.2 லட்சம் கோடியாகும். கர்நாடகா ரூ.8.14 லட்சம் கோடியுடன் அடுத்த இடத்தில் உள்ளது. இந்த ஐந்து மாநிலங்களும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46 சதவீதம் பங்கு வகிக்கின்றன என்பது சிறப்பு. 2015-16ம் ஆண்டின் பொருளாதார புள்ளி விவர அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இக்காலகட்டத்தில் அதிவேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் அருணாச்சல பிரதேசம் 16.5 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஜம்மு காஷ்மீர் 14.7 சதவீத வளர்ச்சியுடன் 2வது இடத்தில் உள்ளது. கோவா 11.5 சதவீதத்துடனும், குஜராத் 11.1 சதவீதத்துடனும், ஆந்திரா 11 சதவீதத்துடனும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

தனி நபர் வருவாயில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. இங்கு ஒவ்வொரு நபருக்கும் சராசரியாக ஆண்டுக்கு ரூ.2,26,583 வருமானம் கிடைக்கிறது. 2வது இடத்தை பிடித்துள்ள கோவா மாநிலத்தில் தலா வருவாய் ரூ.2,23,142 என்ற அளவில் உள்ளது. புதுச்சேரி ரூ.1,41,629 என்ற அளவில் 4வது இடத்தில் உள்ளது. இவையெல்லாமே சிறு மாநிலங்கள் என்பதால் தலா வருவாய் அதிகரிமாக தெரியும் என்பது யதார்த்தம்.

You might also like More from author