இந்திய போலீஸ் வளையத்தில் மரியா ஷரபோவா.!

5 முறை கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டம் வென்ற ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா, ஆடம்பர குடியிருப்பு மோசடி விவகாரத்தில் இந்திய போலீஸின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

இந்த ஆடம்பரக் குடியிருப்புத் திட்டத்தின் பின்னணியில் உள்ள நிறுவனம் மோசடி செய்து கோடிக்கணக்கான ரூபாய்களை வீடு வாங்குவோரிடமிருந்து சுருட்டியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஹோம்ஸ்டெட் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் டெவலப்மெண்ட் என்ற இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது மோசடி வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வீட்டுக்கு பணம் கொடுத்த ஒருவரை பிரதிநிதித்துவம் செய்யும் வழக்கறிஞர் பியூஷ் சிங் ஸ்போர்ட்ஸ்டார் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

இந்த நிறுவனத்தின் இந்த ஆடம்பர குடியிருப்புத் திட்டத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு இதைப் பற்றி விளம்பரப் படுத்தி பேசிய ஷரபோவாவும் இப்போது விசாரணையில் சிக்கியுள்ளார்.

2012-ம் ஆண்டு ஷரபோவா இந்தியாவுக்கு இதற்காகவே வந்து ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த உயர் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் டென்னிஸ் அகாடமி, கிளப் ஹவுஸ், ஹெலிபேட் ஆகியவை உண்டு என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கான இணையதளம் ஷரபோவா அப்போது கூறியதை மேற்கோள் காட்டியுள்ளது, அதில், “வீட்டு உரிமையாளர்கள் தாங்கள் சிறப்பான, வித்தியாசமான ஒன்றை அடைந்து விட்டோம் என்று உணர்வார்கள்” என்று விளம்பர வாசகம் கூறியுள்ளார் ஷரபோவா.

“எந்த ஒரு பொருளையும் திட்டத்தையும் விளம்பரப்படுத்தும் புகழ்பெற்ற நபர்கள் அந்த நிறுவனத்தின் முகவராகவே பார்க்கப்படுவார்கள். ஷரபோவா பெயர் மட்டும் இந்தத் திட்டத்தில் இல்லையெனில் யாரும் இதில் முதலீடு செய்து ஏமாந்திருக்க மாட்டார்கள்” என்கிறார் வழக்கறிஞர் பியூஷ் சிங்.

புதுடெல்லியில் உள்ள குர்கவான் சாட்டிலைட் சிட்டியில் இந்த ஆடம்பர குடியிருப்புத் திட்டம் 2016-ல் முடிந்திருக்க வேண்டும். ஆனால் பலரிடமிருந்து கோடிக்கணக்கான தொகையினை சுருட்டிய பிறகு கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

2015-ம் ஆண்டு 30 மில்லியன் டாலர்கள் ஈட்டியதாக போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்தது, இதில் 23 மில்லியன் டாலர்கள் தொகை இந்த குர்கவான் ஆடம்பர குடியிருப்புத் திட்ட விளம்பரம் உட்பட சம்பாதித்ததாகும்.

You might also like More from author