இருளில் மூழ்கிய ராமேசுவரம் – மழையால் மின் இணைப்பு துண்டிப்பு

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கொட்டித்தீர்க்கும் கனமழையால் சென்னை நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொது மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். தென் மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடியில் மட்டும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் ராமேசுவரத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. எனவே அன்று ராமேசுவரம் தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டது. அதன் பின்னர் மழை சற்று ஓய்ந்திருந்தது

இந்த நிலையில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் நேற்று இரவு 10.30 மணி அளவில் சாரல் மழை தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. 11 மணி வரை பலத்த மழை பெய்தது.

மழை பெய்யத் தொடங்கியதும் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இன்று காலை 8.30 மணி வரை ராமேசுவரம் பகுதிக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் ராமேசுவரம் இருளில் மூழ்கியது.

மழைநீர் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கிய மழைநீரை உடனே அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ராமேசுவரம்-31, தங்கச்சி மடம்-18.2, பாம்பன்-14, பள்ளமோர்குளம்-9, மண்டபம்-6.4, தொண்டி-1.

You might also like More from author