இறுதியில் த்ரில் வெற்றி பெற்றது இந்திய அணி.. இறுதி ஓவரில் கேப்டனாக மாறிய டோனி

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதில் இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி டோனி மற்றும் யுவராஜ் சிங்கின் அதிரடி ஆட்டத்தால் 50 ஓவர் முடிவில் 381 ஓட்டங்கள் குவித்தது.

பல ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த டோனி, யுவராஜ் சிங் இங்கிலாந்து வீரர்களின் பந்தை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பறக்கவிட்டனர்.

சிறப்பாக விளையாடிய யுவராஜ் 150 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய டோனி 6 சிக்சர், 10 பவுண்டரி என 134 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்

இந்த போட்டியுடன் 285 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள டோனி ஒரு நாள் போட்டியில் மட்டும் 203 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் 200 சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை தோனி படைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கடின இலக்கை துரத்துவதற்கு இங்கிலாந்து அணி சார்பில் ஜாய் மற்றும் ஹெல்ஸ் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டத்துவங்கியது. இதனால் அணியின் ஓட்டமும் சீரான இடைவெளியில் உயர்ந்தது.

ஹெல்ஸ் 14 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நட்சத்திர வீரர் ரூட் மற்றும் ராய் தங்கள் அதிரடி ஆட்டத்தை காட்டத்துவங்கினர். இதனால் ரூட் அரைசதம் கடந்து 54 ஓட்டங்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். இதற்கு அடுத்தபடியாக மற்றொரு துவக்க வீரராக களமிறங்கி அசத்திய ராய் 82 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் இங்கிலாந்து அணி தடுமாறிக்கொண்டிருந்தது. இங்கிலாந்து அணியின் தலைவரான மோர்கன் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டார். இந்திய வீரர்களின் பந்துவீச்சாளர்களை ஒரு கை பார்த்தார். இதனால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று விடும் என்ற நம்பிக்கை இருந்தது.

வானவேடிக்கை நிகழ்த்திய மோர்கனை கண்டு கோஹ்லி சற்று பரபரப்புடனே மைதானத்தில் காணப்பட்டார். அவரை வெளியேற்றுவதற்கு இந்திய அணி வீரர்கள் பந்து வீச்சாளார்கள் பலரை மாற்றி மாற்றி கொடுத்தும் பலன் அளிக்கவில்லை.

இறுதியாக விஸ்வரூபம் எடுத்த மோர்கன் 81 பந்தில் 102 ஓட்டங்கள் எடுத்த போது பரிதாபமாக ரன் அவுட் ஆனார். அதன் பின்னரே இந்திய அணி வீரர்கள் சற்று நிதானமாகினர்.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இங்கிலாந்து அணி சார்பில் பிலங்கட் மற்றும் வில்லே களத்தில் ஆடிக்கொண்டிருந்தனர்.

கடைசி ஓவரில் கோஹ்லி சற்று பதற்றத்துடன் காணப்பட்டதால், இந்திய அணியின் முன்னாள் தலைவரான டோனி தலைவர் போல் அனைத்து வீரர்களையும் பீல்டிங்கில் மாற்றம் செய்து கொண்டிருந்தார். அதன் பின்னர் அவரின் ஆலோசனையின் பேரிலே பில்டிங் வீயூகம் வகுக்கப்பட்டது.

அதன் படியே சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் கடைசி ஓவரில் 6 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 366 ஓட்டங்கள் எடுத்து 15 ஓட்டஙகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதனால் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

 

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com