இறுதி கட்டத்தில், ‘பெரா’ வழக்கு..தினகரனுக்கும் ஜெயில்?

தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணை, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அவருக்கு, ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்..

தினகரன், பாஸ்கரன், சுதாகரன் ஆகியோர், சட்ட விரோதமாக வெளிநாட்டு வங்கிகளில், பல கோடி ரூபாய் முதலீடு செய்து, அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து, 1996ல் இருந்து, 2002 வரை, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. அதேபோல், சசிகலாவின் கணவர் நடராஜன், அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோர், லண்டனில் இருந்து, சொகுசு கார் இறக்குமதி செய்து, அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகவும், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இவர்கள் மீதான மொத்தம் ஒன்பது வழக்குகள், சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன.அனைவர் மீதும், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை வேகம் எடுக்க துவங்கி உள்ளது. தினகரன் மீதான வழக்கில், அமலாக்கத்துறையின் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை முடிந்து, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தற்போது, தினகரன் சார்பில் ஆஜர்படுத்தப்படும் சாட்சி களிடம், குறுக்கு விசாரணை நடக்க உள்ளது. இந்த வழக்கு நேற்று மாஜிஸ்திரேட், மலர்மதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை இழுத்தடிக்க, தினகரன் தரப்பில் முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினார். இதற்கு, தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கு, இன்றும் விசாரணைக்கு வருகிறது.

அப்போது வழக்கை விரைந்து முடிக்க, மாஜிஸ்திரேட் அதிரடி உத்தரவுகளை பிறப்பிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில், தினகரனுக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக, சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like More from author