இளைஞர்களை கிரிமினல்கள் போல் நடத்தக்கூடாது: உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் சிறு தவறுகள் செய்து விடும் இளைஞர்களுக்கு எதிராக இளையோர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை கிரிமினல்கள் போல் நடத்தக்கூடாது என்றும் பாதுகாப்பு படையினருக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை கையாளும் போது அளவுக்கதிமான படைகளை உபயோகப்படுத்துவதையும் பாதுகாப்பு படையினர் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜ்நாத்சிங் கூறியதாவது:- “ யாரோ சிலரின் இயக்குதலுக்கு இளைஞர்கள் ஆளாகக்கூடாது என்று நான் கோரிக்கை விடுக்கிறேன். கல் வீச்சு போன்ற சம்பவங்களில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும்.பிரதமர் உட்பட அனைவரும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறோம்.
காஷ்மீர் மக்கள் தங்களின் எதிர்காலத்தை  கடின உழைப்பு மூலம் செதுக்க வேண்டும். பல தலைமுறைகளை பயங்கரவாதிகள் அழித்துவிட்டனர். மேலும் ஒரு தலைமுறையினரை பயங்கரவாதிகள் அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சில தவறுகள் செய்யும் இளைஞர்களை கிரிமினல்கள் போல நடத்த வேண்டாம் என்று பாதுகாப்பு படையை கேட்டுக்கொண்டுள்ளேன். பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like More from author