உலகின் மிகவும் உயரமான சிலையாக வீர சிவாஜி சிலை

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் நிறுவப்பட உள்ள, வீர சிவாஜி சிலை உயரத்தை, 689 அடியாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், உலகின் மிகவும் உயரமான சிலையாக, அது திகழ உள்ளது.
சீனாவில் உள்ள, வசந்த கால கோவிலில் உள்ள புத்தர் சிலை, 682 அடி உயரம் உடையது. இதுவே, உலகில் அதிக உயரமுடைய சிலையாக உள்ளது. மும்பை கடலோரப் பகுதியில் மராட்டிய மன்னர், வீர சிவாஜியின் சிலையை , 630 அடி உயர சிலை அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. தற்போது அதன் உயரம், 689 அடியாக உயர்த்தப்படுகிறது. இதற்கு, சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.

குதிரை மீது அமர்ந்திருக்கும் சிவாஜியின் சிலை அமைக்கும் பணி, 2018 ஜனவரியில் துவங்கி, 2021க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு, 3,000 கோடி ரூபாய் செலவாகும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த சிலை அமைப்பதற்கு, மஹாராஷ்டிரா கடலோர மண்டல நிர்வாக ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மும்பையின் கடலோரத்தில், 15.96 ஏக்கர் பரப்பு நிலத்தில், இந்த சிலை நிறுவப்பட உள்ளது.
அந்த வளாகத்தில், கோவில், மருத்துவமனை, சிவாஜியின் வாழ்க்கையை குறிக்கும் வகையில், ராய்காட் கோட்டை வடிவில், அருங்காட்சியம் உள்ளிட்டவை அமைய உள்ளன.

You might also like More from author