“ஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்” பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி,
டெல்லியில் நேற்று ‘நிதி ஆயோக்’ ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், 200-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசியதாவது:-
நாட்டில் ஊழல் நிறுவனமயமாகி விட்டது, துரதிருஷ்டவசமானது. அதற்கு எதிராக நிறுவன ரீதியாக நாம் நடவடிக்கை எடுத்தால்தான், ஊழலை நிறுத்த முடியும். அதன்படி, ஊழலை வேரறுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
குரூப் 3, குரூப் 4 பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வை ரத்துசெய்தோம். பணத்துக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி வந்த இடைத்தரகர்களின் தலையீட்டை முடிவுக்கு கொண்டு வந்தோம். இதனால் அவர்கள் வேலை இழந்து கூச்சலிட்டு வருகிறார்கள்.
சான்றிதழ்களில் விண்ணப்பதாரர்களே சுய கையொப்பம் இட்டுக்கொள்ள அனுமதி அளித்துள்ளோம்.
புதிய இந்தியா
முன்பெல்லாம், மத்திய மந்திரிகளின் சிபாரிசின்பேரில், பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. அதை சாதாரண மக்களே யாருக்கு வேண்டுமானாலும் சிபாரிசு செய்யலாம் என்று புதிய முறையை கொண்டு வந்துள்ளோம்.
அனைவருடனும் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. ஏனென்றால், அரசும், அதன் முயற்சிகளும் மட்டுமே புதிய இந்தியாவை உருவாக்கிவிட முடியாது. ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் இருந்தால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.
நாம் அனைவரும் தேச பக்தியில் சமமானவர்கள். நாட்டு நலனில் எந்த மாறுபாடும் கிடையாது. இந்தியா புதிய உயரத்தை அடைய நாம் விரும்புகிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

You might also like More from author