எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா ஆள் தேடும் சிவகங்கை அதிகாரிகள்

சிவகங்கையில் நடக்கும் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவிற்கு ஆட்களை அழைத்து வரும் பொறுப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் புலம்பி வருகின்றனர்.
எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நவ., 18 சிவகங்கையில் நடக்கிறது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்கின்றனர். வருவாய், ஊரகவளர்ச்சி, மறுவாழ்வு நலம், சமூக நலம், ஆதிராவிடர் நலம், பிறப்பட்டோர் உள்ளிட்ட துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக இரண்டு மாதங்களாகவே மாவட்டத்தில் எந்த நலத்திட்டமும் வழங்கவில்லை. மேலும் விழாவில் குறைந்தது 50 ஆயிரம் பேர் இருக்க வேண்டுமென, முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கட்சி நிர்வாகிகளால் ஆட்களை சேர்ப்பதில் சிரமம் உள்ளது. இதையடுத்து பயனாளிகளுடன் குறைந்தது 2 நபர்களையாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழாவிற்கு அழைத்து வர வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவர்களுக்கு உணவு மட்டுமே தரப்படும். மற்ற செலவுகளை அந்தந்த அதிகாரிகளே கவனித்து கொள்ள வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ‘ஆட்களை அழைத்து வருவதை விட, அவர்களை எப்படி சேர்ப்பது,’ என அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.

 

You might also like More from author