எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சொத்து உயர்வு: விரைவு கோர்ட்டுகள் அமைத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு யோசனை

லோக் பிரஹாரி  என்ற தொண்டு நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், ‘அரசியல்வாதிகள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, தங்கள் சொத்து மற்றும் குடும்பத்தினரின் சொத்து விவரங்களை குறிப்பிடுகிறார்கள். ஆனால், அந்த சொத்து எப்படி வந்தது என்பதை குறிப்பிடுவது இல்லை. அவர்கள் பதவி வகிக்கும் காலத்தில், அவர்களது சொத்துகள், வருமானத்துக்கு பொருந்தாத அளவுக்கு உயர்ந்து விடுகிறது. இதை விசாரிக்க நிரந்தர அமைப்பை உருவாக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள் ஜெ.செல்லமேஸ்வர், அப்துல் நாசர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது.
கடந்த 6-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, சொத்து மதிப்பு உயர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு எந்த தகவலும் தெரிவிக்க மறுக்கிறது என்று நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.
98 எம்.எல்.ஏ.க்கள்
இதையடுத்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் பிரமாண மனு தாக்கல் செய்தது. அதில், நாடு முழுவதும் 7 எம்.பி.க்கள் மற்றும் 98 எம்.எல்.ஏ.க்களின் சொத்துகள் பல மடங்கு உயர்ந்து இருப்பதாகவும், அதுபற்றி விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்பட்டு இருந்தது. அவர்களின் பெயர்களையும் அளித்தது.
விரைவு கோர்ட்டு
இந்நிலையில், நேற்று மீண்டும் இம்மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கூறியதாவது:-
இந்த விவகாரத்தை பொறுத்தவரை, பாராளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க புதிய விரைவு கோர்ட்டுகளை அமைப்பதே நல்லது.
பாராளுமன்றம், சட்டசபைகள் புதிதாக சட்டம் இயற்றும்போதெல்லாம், அதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு, தற்போதைய கோர்ட்டுகளிலேயே அவை விசாரிக்கப்படுகின்றன. இதனால், தேங்கும் வழக்குகளின் எண்ணிக்கை உயருகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், தேங்கும் வழக்குகள் உயர்வதற்கு ஒரு காரணம் ஆகும்.
சொத்து எப்படி வந்தது?
ஆகவே, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக விரைவு கோர்ட்டுகள் அமைக்க பாராளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். அவற்றில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்.
சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெயர்களை நாங்கள் படித்து பார்த்தோம். இந்த விஷயத்தை ஆய்வு செய்வோம். 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவர், 2019-ம் ஆண்டு தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அவரது சொத்துகள் 5 மடங்கு, 10 மடங்கு உயர்ந்திருந்தால், அந்த சொத்து எப்படி வந்தது என்று விசாரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறிய நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
அட்டார்னி ஜெனரல் வரவேற்பு
மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘விரைவு கோர்ட்டுகள் அமைப்பது இந்த நேரத்தில் தேவையானது’ என்று வரவேற்பு தெரிவித்தார்.
சொத்து மதிப்பில் அதிக உயர்வு தெரிந்தால், அத்தகையவர்கள் மீது விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

You might also like More from author