எய்ட்ஸ் நோயால் 6 ஆயிரம் பேர் பாதிப்பு

திருவண்ணாமலை, மே 20:

திருவண்ணாமலை மாவட்டத்தில் எச்ஐவி என்கிற எய்ட்ஸ்
நோயால் 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர்
பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்
வளாகத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில்
உலக எச்ஐவி விழிப்புணர்வு நாளையட்டி எச்ஐவி எய்ட்ஸால்
உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்
மு.வடநேரே எய்ட்ஸால் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
செலுத்தினார். அப்போது அவர் பேசும்போது எச்ஐவி எய்ட்ஸ் தொற்றால்
பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக எச்ஐவி தடுப்பூசி விழிப்புணர்வு நாள்
மற்றும் எச்ஐவி எய்ட்ஸால் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தும்
நிகழ்ச்சி 1983ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வின்
மூலம் எச்ஐவி எய்ட்ஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு சிகிச்சை
பற்றிஎடுத்துரைக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இந்நிகழ்வின் முக்கிய கருவாக
அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி ஒருங்கிணைந்து ஒழிப்போம் என்பதாகும். எனவே
அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி எச்ஐவி தொற்றினை பூஜிய நிலைக்கு கொண்டு
வருதல் மற்றும் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் உள்ளோரை புறக்கணிப்பு செய்யாமை
எய்ட்ஸால் இறப்புஇல்லாமை என்ற இலக்கினை அடைய வேண்டும் என கேட்டுக்கொண்ட
அவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அனைத்து அரசு
மருத்துவமனைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கூடுதல் ஆரம்ப சுகாதார
நிலையங்கள் மற்றும் மொபைல் நம்பிக்கை மையங்களின்மூலம் மொத்தம் 84
மையங்களில் இலவசமாக எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் 5 தனியார் மருத்துவமனைகளிலிலும் எச்ஐவி பரிசோதனை
செய்யப்பட்டுவருகிறது. இம்மாவட்டத்தில் இந்நோயால் 6 ஆயிரம் பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். என்றார். இந்த நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை
இயக்குநர் கீதா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் (செய்யாறு) காவிந்தராஜ்,
காசநோய் பிரிவு துணை இயக்குநர் அசோக், மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய
மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

You might also like More from author