ஐநா-வின் அமைதிக்கான இளம் தூதராகிறார் மலாலா

பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடி, ஓர் புரட்சியை விதைத்து மரணத்தையும் எதிர்த்து மீண்டு வந்தவர் மலாலா யூசுப்சாய். ஐநா-வின் அமைதிக்கான தூதராகப் பதவியேற்கிறார் மலாலா. ஐநா-வின் இளம் தூதர் என்ற பெருமையும் இவரையேச் சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் தனது 11-வது வயதிலேயே பெண் கல்வி குறித்து பல மேடைகளிலும் பிரசாரம் செய்தவர். தொடர்ந்து பள்ளிகளையும், கல்லூரிகளையும் தாக்கி வந்த தலிபான்களை எதிர்த்து மேடை பிரசாரமும் கட்டுரைகளும் எழுதி தனது எதிர்ப்பை பதிவு செய்துவந்தார். தலிபான்களின் கடும் கண்டனங்களுக்கு ஆளான மலாலா, 2012-ம் ஆண்டு தீவிரவாதிகளால் பள்ளி செல்லும் வழியில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்குப் போராடி, ஒரு வருட கால சிகிச்சைக்குப் பின்னர் மீண்டு வந்தார்.

பல எதிர்ப்புகளும் கொலை மிரட்டல்களும் தொடர்ந்து வந்தாலும் பெண் கல்வியை வலியுறுத்தி இன்றும் போராடி வருகிறார் மலாலா. இந்த இளம் பெண்ணின் சாதனையைப் பாராட்டி 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற பெருமைக்கும் உரியவரானார்.

தற்போது மலாலாவை மேலும் பெருமைப்படுத்தும் வகையில் ஐநா, அமைதிக்கான இளம் தூதராக அவரை நியமிக்கவிருக்கிறது. தற்போது பிரிட்டனில் கல்வி பயின்று வரும் மலாலா, வளரும் உலக நாடுகளில் பெண் கல்வியை வளர்க்க நிதி திரட்டி உதவி வருகிறார்

You might also like More from author