ஒடிசாவில் தொடரும் பதற்றம்

இந்துக் கடவுளைக் குறித்து ஃபேஸ்புக்கில் எதிர்மறையாகக் கருத்து வெளியிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒடிசாவில் வி.ஹெச்.பி. மற்றும் பஜ்ரங்தள் கட்சியினர், பத்ரக் நகர காவல்நிலையத்தின் எதிரே, பதிவிட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்யக் கோரி போராடினர். கடந்த வியாழக்கிழமை துவங்கிய இந்தப் போராட்டம், கலவரமாக மாறியது. ஒருகட்டத்தில் கடைகளை உடைத்தும், டயர்களை எரித்தும் வன்முறையில் இறங்கினர். இதனால் அங்கு அமைதி குலைந்து, பதற்றம் அதிகரித்தது.
பத்ரக் மாவட்டத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக், போராட்டக்காரர்களை அமைதிக்குத் திரும்பும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  அங்கு, ஞாயிற்றுக்கிழமையும் சில பகுதிகளில் கலவரம் நடந்துள்ளது.
இதையடுத்து அங்கு, மத்திய ரிசர்வ் படையினர் 1,000-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். பத்ரக் நகரத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளுக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். வன்முறைச் சம்பவம் தொடர்பாக 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், அங்கு இரண்டு நாள்களுக்கு (48 மணி நேரம்) சமூக வலைதளங்கள் பயன்படுத்தவும்  தடை  விதிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author