கட்சிப் பொறுப்பிலிருந்து என்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை: ஓபிஎஸ்

கட்சிப் பொறுப்பிலிருந்து தன்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், ”என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன்” என்று அதிரடியாக கூறினார்.

இதனையடுத்து கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்தார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், “கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து என்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை. கட்சிக்கும், ஜெயலலிதாவுக்கும் விசுவாசியாக இருக்கிறேன். பின்னணியில் இருந்து என்னை யாரும் இயக்கவில்லை.

சட்டப்பேரவையில் நான் எதிர்க்கட்சித் தலைவருடன் சிரித்துப் பேசியதாக குற்றஞ்சாட்டுகின்றனர். சிரிப்பது மனிதர்கள் இயல்பு. விலங்குகள் சிரிப்பதில்லை. தேக்கி வைத்திருந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னைப் போன்றோரை உயரத்துக்கு வர வைத்திருக்கிறார் ‘அம்மா’. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என நான் தினந்தோறும் வேண்டிக் கொண்டிருக்கிறேன். அவரது நினைவிடத்துக்கு பிரார்த்தனை செய்யவே சென்றேன். என் மன ஓட்டத்தில் ஜெயலலிதா மறைவு முதல் இன்றுவரை நடந்த நிகழ்வுகள் ஓடின. அப்போது அவற்றை வெளிப்படுத்த வேண்டும் என அம்மாவின் ஆன்மா உந்தியது.

அதனடிப்படையிலேயே அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களிடம் அம்மா மறைவு முதல் இன்றுவரை நடந்த சம்பவங்களைத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாய சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன். 100%-ல் வெறும் 10% மட்டுமே நான் சொல்லியிருக்கிறேன். அதற்குக் காரணம் என் சுய கட்டுப்பாடு.

அடுத்தவர் மனதை புண்படுத்தக் கூடாது என்பதற்காகவே அமைதி காத்தேன். எனது பொறுமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து வந்தது. சட்டப்பேரவை உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டேன். ஆனால், முதல்வர் பதவியேற்றதிலிருந்தே பிரச்சினை தொடங்கிவிட்டது. ஆந்திர முதல்வரைச் சந்தித்து தண்ணீர் பெற்றது, ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டது. இவையெல்லாம் அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருக்கிறார். அதற்குக் காரணம் அவரது மக்கள் நலப் பணிகள். அவர் சம்பாதித்துவைத்த அந்த நல்ல பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது எனக்கு கோபம் வந்தது.

என்னிடம் இறுக்கம் காட்டினார்கள். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது நான் பேச ஆரம்பித்தவுடன் சசிகலா எழுந்து சென்றார். இப்படியாக அவர் தொடர்ந்து என்னிடம் இறுக்கம் காட்டினார்.

இது குறித்து என்னிடம் பலரும் கேள்வி எழுப்பினார்கள். அவர்களிடம் எல்லாம், எனக்குத் தெரியவில்லை நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றேன். இப்படித்தான் பல நிகழ்வுகள் புரியாத புதிராக இருந்தது. அந்த நேரத்தில்தான் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் பேசினார். கழகப் பொதுச் செயலாளரே தமிழக முதல்வராக வரவேண்டும் என்றார். என்னை ஏன் அவமானப்படுத்தினார்கள் எனத் தெரியவில்லை. நிலையற்ற தன்மையை அமைச்சர்களைக் கொண்டே உருவாக்குகிறார்களே என்ற வேதனை இருந்தது. என்னுடைய அதிருப்தியை யாரிடமும் தெரிவிக்காமலேயே எனது கடமையை செய்துவந்தேன்” என்றார்.

பேட்டி கொடுக்கச் சொன்னார்கள்…

அவர் மேலும் கூறும்போது “நான் பேட்டி கொடுக்க வேண்டும் என்றார்கள். என்ன பேட்டி என்று கேட்டபோது, சசிகலா முதல்வராவார் என நீங்களே பேட்டி மூலம் தெரிவிக்க வேண்டும் என்றனர். அரசியல் சாசனப்படி முதல்வராகப் பதவியேற்றுள்ள நான் அவ்வாறாக ஒரு பேட்டியளித்தால் அது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் என்றேன். அதற்குக் கண்டிப்பு தெரிவித்தார்கள். எனக்கு தாங்க முடியாத மன வேதனை இருந்தது. கட்சியின் தொண்டர்களின் மன வேதனையையும் என்னால் உணர முடிந்தது. கட்சிக்கு அவப்பெயர் வந்துவிட்டதை நான் உணர்ந்தேன். இவை மிகுந்த வேதனையைத் தந்தது. ஏற்கெனவே நான் வேண்டாம் என்று சொல்லியும் எனக்கு முதல்வர் பதவியைக் கொடுத்துவிட்டு எதற்காக என்னை அவமானப்படுத்துகிறார்கள் என்ற வேதனை ஏற்பட்டது” இவ்வாறு அவர் கூறினார்.

‘நான் மிகப்பெரிய விசுவாசி’

“எனது விசுவாசம் பற்றி கழகத்தின் தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும். எனது அரசியல் வாழ்க்கையில் நான் படிப்படியாக பெற்ற பதவிகள் அனைத்துமே நான் கேட்காமலேயே கொடுக்கப்பட்டது. அதற்குக் காரணம் எனது விசுவாசமே. இதை நான் பெருமையாகச் சொல்லவில்லை. எனக்கு வழங்கப்பட்ட பதவிகள் அனைத்துமே ஜெயலலிதாவால் முழு மனதாக வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

‘அப்போலோவில் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை’

“அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களில் நான் ஒருமுறைகூட அவரைப் பார்க்கவில்லை. அவரை பார்க்கமுடியாதது எனது துரதிர்ஷ்டம் எனக் கருதுகிறேன். முன்னாள் முதல்வர் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விளக்கங்களை அளிக்க வேண்டிய கடமை இருக்கிறது” என்றார்.

‘புன்முறுவல் என் இயல்பு’

“எப்போதுமே புன்முறுவலுடன் இருப்பது எனது இயல்பு. அதன் காரணமாகவே, போயஸ் கார்டனில் பதவி ராஜினாமா தொடர்பாக 2 மணி நேரமாக வாதாடிவிட்டு சட்டப்பேரவைக் குழு கூட்டத்திற்கு வந்தபோதும்கூட எந்தவித இறுக்கத்தையும் காட்டாமல் இயல்பாக இருந்தேன்” எனக் கூறினார்.

‘ஏன் இந்த அவசரம்’

இவ்வளவு அவசரமாக முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் எப்படி அவருக்கு வந்தது என்பது எனக்குப் புரியவில்லை. என் மீது சசிகலாவுக்கு என்ன ஈகோ என்பது எனக்குத் தெரியவில்லை. கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் மனநிலை சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். அதனடிப்படையில்தான் ஏன் அவசரப்பட்டார் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. காலங்கள் கனியும்போது பொதுச் செயலாளரை முதல்வராகியிருக்கலாம். நல்ல சூழல் உருவாகும்வரை காத்திருப்பதே ஆரோக்கியமான அரசியலுக்கு எடுத்துக்காட்டு. எந்தப் பதவிக்கும் யாரையாவது திணித்தால் எத்தகைய விபரீதம் உண்டாகும் என்பது நாமெல்லாம் அறிந்ததே. தெரிந்திருந்தும் ஏன் அவசரம் காட்டுகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சசிகலா அவசரம் காட்டுகிறார் என்று என்னிடம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கூறியபோதெல்லாம் என்னிடம் கூறியதோடு நிறுத்திவிடுங்கள். வேறு எங்கும் சொல்லாதீர்கள் என்று அறிவுரை கூறினேன். ஆனால், இன்று எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச வேண்டிய கட்டாய நிலைக்கு நான் வந்துள்ளேன்” எனக் கூறினார்.

ராஜினாமா ஏன்?

“கட்சிக் கட்டுப்பாட்டை மீறினார், துரோகம் செய்துவிட்டேன் என்று சொல்வார்கள் என்ற குற்றஞ்சாட்டுவார்கள் என்பதற்காகத்தான் கட்டாயப்படுத்துக்கு உட்பட்டு ராஜினாமா செய்தேன்” என தனது ராஜினாமா குறித்துக் கூறினார்.

பாஜகவுக்கு ஆதரவாக செயல்படவில்லை:

“நான் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. எப்போதாவது நான் பாஜகவுக்கு ஆதரவாக வாதாடியிருக்கிறேனா அல்லது கருத்து சொல்லியிருக்கிறேனா. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக உருப்பெற்றது. அத்தகைய நிலையில், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்ற சூழல் உருவானால் அதிமுகவுக்கு எவ்வளவு பெரிய அவப்பெயர் வரும். இது எனக்கு கவலை ஏற்படுத்தியது. அதனால் டெல்லி சென்றேன். பிரதமரும் தமிழகத்தின் சூழலைஅறிந்து உதவினார். இதுதான் நடந்தது. இதில் நான் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது” என்று விளக்கினார்.

யாருக்கும் உரிமை இல்லை:

“கட்சி பொறுப்பில் இருந்து என்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை. இந்த பதவி 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதா எனக்கு வழங்கியது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

You might also like More from author