கவர்னர் பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணம்

சென்னை:

அசாம் மாநில கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித்தை தமிழக கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடந்த மாதம் 30-ந்தேதி உத்தரவிட்டார். அதன்படி, தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் 6-ந்தேதி பதவி ஏற்றார். அப்போது கவர்னரை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் கவர்னர்கள் மாநாட்டில் பங்கேற்கவும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை மரியாதை நிமித்தமாக சந்திக்கவும் டெல்லிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து கவர்னர் மாளிகை அதிகாரிகள் கூறியதாவது:-

டெல்லி சென்றுள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் மரியாதை நிமித்தமாக ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து பெறுகிறார். பின்னர் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி அருண்ஜெட்லி உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.

இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) மரியாதை நிமித்தமான சந்திப்புகள் நடைபெறும்.

ஜனாதிபதி மாளிகையில் 12, 13-ந்தேதிகளில் கவர்னர்கள் மாநாடு நடக்கிறது. இதில் அனைத்து மாநில கவர்னர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் கலந்து கொள்ள உள்ளார். பின்னர் அவர் சென்னை புறப்பட்டு வருகிறார்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

டெல்லி பயணத்தின் போது பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேச உள்ளார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக கவர்னராக பதவி ஏற்ற பின்னர் பன்வாரிலால் புரோகித்தின் முதல் டெல்லி பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author