குடிநீர் பிரச்சனையை தீர்க்க ரூ. 20.65 கோடி மதிப்பிலான பணிக்கு அனுமதி அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் தகவல்

திருவண்ணாமலை, ஏப் 25:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட
அரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வறட்சி நிவாரணப் பணிகள்
குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
மற்றும் நில நிர்வாக ஆணையர் ஜதின்திராநாத் ஸ்வைன், மாவட்ட ஆட்சியர்
பிராசந்த் மு. வடநேரே ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இந்த ஆய்வு
கூட்டத்திற்கு, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்
சேவூர்.எஸ்.இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.வனரோஜா, செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, சட்டமன்ற
உறுப்பினர்கள் வி.பன்னீர்செல்வம், தூசி.கே.மோகன்,  மாவட்ட வருவாய்
அலுவலர் சா.பழனி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்
க.லோகநாயகி, தண்டராம்பட்டு நிலவள வங்கி தலைவர் எஸ்.ஆர்.தருமலிங்கம்,
முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, முன்னாள்
வணிகவரி ஆலோசனைக் குழு உறுப்பினர் பெருமாள் நகர் கே.ராஜன், அனைத்து
அரசுத் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின்
பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்டத்தில் வறட்சி
நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்த துறை வாரியாக விரிவான
ஆய்வு மேற்கொண்டு, செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது ‘மறைந்த முன்னாள்
முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி அனைத்து மக்கள் நலத்திட்டங்கள்
தமிழகம் முழுவதும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள
பிரச்சனைகளை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ரூ.20.65 கோடி
மதிப்பீட்டில் 1062 குடிநீர் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கூட்டு குடிநீர்
திட்டம் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக பகுதிகளில் செயல்படுத்துவதற்காக
ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் களப்பணி மற்றம் நில ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவத்திபுரம் மற்றம் ஆரணி நகராட்சிகளில்
குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 11 பணிகள் ரூ.50 கோடி
மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மத்திய
பென்னையாறு வடிநிலக் கோட்டம் மூலமாக 18 ஏரிகளில் குடிமராமத்து பணிகள்
ரூ.1.33 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சிறு கற்பாறைகளை கொண்டு கேபியான்
தடுப்பணைகளும், செறிவுட்டு குழிகளும் மாவட்டம் முழுவதும் ரூ.8.09 கோடி
மதிப்பீட்டில் 1037 இடங்களில் கட்டப்பட்டு வருகிறது, இதுவரை 600 பணிகள்
முடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 450 கி.மீ. நீளத்திற்கு
பல்வேறு வாய்கால்கள் புணரமைக்கப்பட்டுள்ளது. மேலும், 290 கி.மீ.

நீளத்திற்கு வாய்கால்கள் நடப்பாண்டில் புணரமைக்கப்படவுள்ளது. மாவட்டம்
முழுவதும் 22 கால்நடை உலர் தீவன கிடங்குகள் திறக்கப்பட்டு மானிய விலையில்
கால்நடை விவசாயிகளுக்கு உலர் தீவனம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 700
மெட்ரிக் டன் உலர் தீவனம் கால்நடை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது’
என்றார்.

முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம்,
முத்தனூர் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்
கீழ், கால்வாய் ஓடையின் குறுக்கே கற்பாறை தடுப்பணை மற்றும் மீள்
நிரப்புக் குழிகள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே
தலைமையில், அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன், நேரில் சென்று
பார்வையிட்டு, கட்டுமானப் பணிகளில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பன்னீர்செல்வம், தூசி.கே.மோகன், முன்னாள்
வணிகவரி ஆலோசனைக் குழு உறுப்பினர் பெருமாள் நகர் கே.ராஜன், கூட்டுறவு
சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு
அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள், ஆகியோர் மாண்புமிகு அமைச்சர் மற்றம்
மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து கட்டுமானப் பணிகளில் தங்களையும்
ஈடுபடுத்திக்கொண்டனர்.

You might also like More from author