கெயில் திட்டத்தை நிறைவேற்ற முயன்றால் விவசாயிகளுடன் சேர்ந்து தி.மு.க. போராட்டம் நடத்தும்: மு.க.ஸ்டாலின்

சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள விளைநிலங்களின் ஊடாக ‘கெயில்’ நிறுவனத்தின் எரிவாயு குழாய்களைப் பதிக்க, மீண்டும் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்வதற்கு தி.மு.க.வின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்ட விளைநிலங்களின் வழியாக 310 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 20 மீட்டர் அகலத்தில் செல்லும் இந்த எரிவாயு குழாய்கள் சிறு – குறு விவாசாயிகளின் எதிர்காலத்தை நசுக்கும் ஆபத்தான திட்டம்.

அதுமட்டுமின்றி, இந்த திட்டத்தினால் கல்வி நிறுவனங்கள், வீடுகள், கோழி பண்ணைகள், தென்னை மரங்கள், மாந்தோப்புகள் போன்றவை அதிகமான பாதிப்புக்குள்ளாகும். மேற்கு மண்டலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களையும் பேரிடருக்கு உள்ளாக்கும் இந்த ‘கெயில்’ திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கொதித்தெழுந்து உள்ளனர். “துப்பாக்கி குண்டுகளுக்கும் அஞ்சாமல் எங்கள் விளைநிலங்களை பாதுகாப்போம்”, என்ற விவசாயிகளின் ஆவேசக் குரலை மத்திய அரசு உதாசீனப்படுத்தக்கூடாது.

கடந்த 25032013 அன்று நடைபெற்ற தி.மு.கழகத்தின் தலைமைச் செயற்குழுவில், “கேரளா மற்றும் கர்நாடகாவில் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில், விவசாய நிலங்களைத் தவிர்த்து விட்டு, அரசுக்குச் சொந்தமான நெடுஞ்சாலையோரங்களில் குழாய் பதிக்கும் பணியில் இந்திய எரிவாயு கழகம் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் விவசாயிகளின் விளைநிலங்கள் வழியே குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது, விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழக விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாத வகையில், சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் இப்பணியை மேற்கொள்ள இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது”, என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதே தேதியில், “விவசாயிகளை பாதிக்கும் இத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்”, என அன்றைய முதல்வர் ஜெயலலிதா சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசியபோது உறுதி அளித்தார்.

இத்திட்டத்தை நிறைவேற்றலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு, “கெயில் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்”, என்று தமிழக அரசின் சார்பில் கடந்த 8.2.2016 அன்று பிரதமர் நரேந்திரமோடிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி, பிரதான எதிர்கட்சி, விவசாயப் பெருங்குடி மக்கள் ஆகியோரின் கோரிக்கைகளை மதிக்காமல், “விவசாய நிலங்களின் ஊடாகவே எரிவாயு குழாய்களைப் பதிப்போம்”, என்று அராஜகமாக ஒரு திட்டத்தை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தமிழகத்தின் மீது திணிக்க முற்படுவது மத்திய மாநில உறவுகளுக்கு ஏற்றதல்ல. மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அழகல்ல.

ஏற்கனவே நீட் தேர்வு, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, கேரளா மற்றும் ஆந்திர அரசுகள் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் முயற்சிகள், கர்நாடகாவின் மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சி உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளை கோட்டைவிட்ட ‘குதிரை பேர’ அதிமுக அரசு, கெயில் திட்ட விவகாரத்திலும் கோட்டை விட்டு குறட்டை விட்டுத் தூங்கக் கூடாது.

பொதுமக்கள் நலன் கருதி, விவசாய நிலங்களுக்கு ஊடே எரிவாயு குழாய் பதிக்கும் முடிவினை மத்திய அரசு கைவிட்டு, விவசாயிகளையும், பொது மக்களையும் பாதிக்காத வகையில் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வேண்டுகோளையும் மீறி மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை பாதிக்கும் வகையில் கெயில் திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டால், மேற்கு மண்டலத்தில் உள்ள ஏழு மாவட்ட விவசாயிகளுடன் இணைந்து தி.மு.க. போராடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like More from author