கோஷ்டி மோதல் – 3 பேர் படுகாயம் பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை, மார்.3:

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள
கடலாடி கிராமத்தில் உள்ள சிவன்கோவிலில் கடந்த 24ந் தேதி சிவராத்திரி விழா
நடந்தது. சுவாமி தரிசனம் செய்த பெண்கள் கோவிலை வலம் வந்தனர். அப்போது அதே
கிராமத்தைச் சேர்ந்த நலன் (25) என்பவர் எதிர்திசையில் கோவிலை வலம் வந்தாக
தெரிகிறது. இதை அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (17), கணேசன் (27)
ஆகியோர் பெண்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஏன் எதிர்திசையில் வலம்
வருகிறாய் என கேட்டுள்ளார். இதில் இவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் அவர்களைசமாதானம் செய்து
அனுப்பிவைத்தனர். இந்நிலையில் நேற்று விஜயகுமார், கணேசன், கடலாடியில்
நடந்த வாரச்சந்தைக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த நலன், தனது
ஆதரவாளர்கள் 10 பேருடன் சேர்ந்து விஜயகுமார், கணேசன் ஆகிய இருவரையும்
சரமாரியாக தாக்கியுள்ளனர். பதிலுக்கு விஜயகுமாரும் தாக்கினாராம்.
படுகாயமடைந்த விஜயகுமார், கணேசன், நலன் ஆகியோர் திருவண்ணாமலை அரசு
மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே விஜயகுமாரின்
உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் நலன் மீதும் அவரது ஆதரவாளர் மீதும்
நடவடிக்கை எடுக்கக்கோரி கடலாடி பேருந்து நிலையத்திற்கு அருகே சாலை
மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போளூர் டிஎஸ்பி
கோட்டீஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜகோபால், சுரேஷ் சண்முகம் மற்றும்
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து
உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு
அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்த 10 பேரை
பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com