சசிகலாவின் ஆதரவுக் கூடாரம் காலியாகிறது

அ.தி.மு.க., துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரனுக்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில், நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாகி வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், பதவியை பிடிக்கும் எண்ணத்தில் உள்ள கட்சியின் கிளை கழக நிர்வாகிகள், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணிக்கு ஓட்டம் பிடித்து வருகின்றனர். தங்களது கூடாரம் காலியாவதால், சசிகலா தரப்பு கலக்கத்தில் உள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்ப அரசியலை, மறைந்த முதல்வர்கள் எம்.ஜி. ஆர்., – ஜெயலலிதா ஆகியோர் எதிர்த்து போராடினர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரும், கட்சி பதவியில் நியமிக்கப்பட்டது கிடையாது.

ஆனால், ஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட சசிகலா, சிறை செல்லும் நிலை வந்ததும், தன் அக்கா மகன் டி.டி.வி.தினகரனை கட்சியில் சேர்த்தார், மறுநாளே, அவரை துணை பொதுச் செயலராக்கினார்.

இது, தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவின் குடும்ப அரசியலை எதிர்த்து போர்க்கொடி துாக்கியுள்ள, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, மக்கள் ஆதரவும், தொண்டர்கள் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

சசிகலா அணியில், மதில்மேல் பூனையாக, இரட்டை மன நிலையில் இருந்த கட்சி நிர்வாகிகள் பலர், பன்னீர்செல்வம் அணிக்கு தாவி வருகின்றனர்.

சமீபத்தில், அ.தி.மு.க., மீனவரணி மாநில இணை செயலர் நீலாங்கரை முனுசாமி, தன் ஆதரவாளர்களுடன் பன்னீர்செல்வத்தை சந்தித்து, ஆதரவு தெரிவித்தார்.

அத்துடன், தமிழகம் முழுவதுமுள்ள மீனவர் அணி நிர்வாகிகளை, சசிகலா அணியிலிருந்து கூண்டோடு இழுத்து, பன்னீர்செல்வம் அணியில் கொண்டு சேர்க்கும் முயற்சியிலும், அவரும் அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

திருவல்லிக்கேணி முன்னாள் கவுன்சிலர் எம்.ஜி.ஆர்., வாசன், பகுதி நிர்வாகி ஜெ.சீனிவாசன், வில்லிவாக்கம் பகுதி நிர்வாகி கோகுல், மணப்பாக்கம் ஸ்ரீகாந்த் உட்பட பலர், பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம், சித்தாமூர், அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில், பெரும்பாலான அ.தி.மு.க.,வினர், சசிகலா கூடாரத்தை காலி செய்து விட்டு, பன்னீர் அணிக்கு தாவி வருகின்றனர்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, ஏராள மான நிர்வாகிகள் நேற்று, பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்தனர்.

அவர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், ”உங்கள் மாவட்டத்தில் இருந்து முதலில் ஆதரவு அளித்தது, கே.பி.முனுசாமி தான். அம்மா ஆத்மா நம்மை வழிநடத்தி செல்கிறது. தர்ம யுத்தத்தில் நாம் வெற்றி பெறுவோம்,” என்றார்.

தற்போது, வணிக வரித்துறை அமைச்சர் வீரமணியும், இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்து வருவதாக கூறப்படுகிறது.

அவருக்கு,வேலுார் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர, ஒன்றிய செயலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்காததால், விரைவில் அவரும், பன்னீர் அணிக்கு தாவலாம் என தெரிகிறது.

இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் யாருக்கும் பிடிக்கவில்லை. கட்சியில் மூத்த நிர்வாகிகள் இருந்தும், தினகரனுக்கு துணை பொதுச் செயலர் பதவி கொடுத்தது, தொண்டர்கள் மற்றும் இரண்டாம் கட்ட நிர்வாகிகளை கொதிப்படைய வைத்துள்ளது.

சசிகலாவை பொதுச் செயலராக நியமித்தது செல்லாது; அவரால் நியமிக்கப்பட்ட துணை பொதுச் செயலர், டி.டி.வி.தினகரன் நியமனம் செல்லாது’ என, தேர்தல் கமிஷனில் பன்னீர் செல்வம் அணி புகார் அளித்தது. இது தொடர்பாக, நாளைக்குள் பதில் அளிக்க, தேர்தல் கமிஷன் காலக்கெடு விதித்துள்ளது.

தேர்தல் கமிஷனின் முடிவு, பன்னீர்செல்வம் அணிக்கு சாதகமாக அமையும் என, எதிர்பார்க்கிறோம். அதனால், இரட்டை இலை சின்னம், பன்னீர் அணிக்கு கிடைக்கும்.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதனால், ‘முன்னரே சென்றால் உள்ளாட்சி பதவிகளை பிடிக்க முடியும், கட்சியில் பொறுப்பும் கிடைக்கும்’ என, இரண்டாம் கட்ட நிர்வாகிகள் முதல், கிளைக்கழக நிர்வாகிகள் வரை, பன்னீர்செல்வம் பக்கம் தாவி வருகின்றனர்.

இதையெல்லாம் பார்த்தால், சசிகலாவின் கூடாரம் காலியாவதையே காட்டுகிறது. அடுத்தடுத்து, முக்கிய நிர்வாகிகளும் அணி மாறுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com