சிவகங்கையில் இடியும் நிலையில் உள்ள 336 வீடுகளை இடிக்க தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிவகங்கை 48 காலனியில் முதற்கட்டமாக 1972-73ல் 48 வீடுகள் கட்டப்பட்டன. தொடர்ந்து மருதுபாண்டியர் நகரில் 1984-86ல் இரண்டாவது கட்டமாக 288 வீடுகள் கட்டப்பட்டன.
அதேபகுதியில் மூன்றாம் கட்டமாக 1987-89 ல் 366 வீடுகளும், நான்காம் கட்டமாக 1992-94 ல் 96 வீடுகளும் கட்டப்பட்டன. மொத்தம் 798 வீடுகள் உள்ளன. முறையான பராமரிப்பு இல்லாததால் பல வீடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளன.
இதில் முதல் இரண்டு கட்டங்களில் கட்டப்பட்ட 336 வீடுகள் முற்றிலும் சேதமடைந்து குடியிருக்க தகுதியில்லாதவையாக உள்ளன. அங்கு குடியிருப்போருக்கு பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் தொடர்ந்து 35 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே சேதமடைந்த 336 வீடுகளையும் இடிக்க வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டமதிப்பீடு தயாரித்து வாரியத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
அதேபோல் மூன்றாவது, நான்காவது கட்டங்களில் கட்டப்பட்ட 462 வீடுகளில் 95 வீடுகள் சேமடைந்துவிட்டன. மீதமுள்ள வீடுகளில் 332 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவற்றை சீரமைக்க வாரியம் முடிவு செய்துள்ளது.
வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘முற்றிலும் தகுதியில்லாத 336 வீடுகள் விரைவில் இடிக்கப்படும்.
பகுதியளவு சேதமடைந்த வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே 48 வீடுகள் சீரமைக்கப்பட்டன,’ என்றார்.

You might also like More from author