சிவகங்கை அரசு மருத்துவமனை செல்ல பை- பாஸ் ரோட்டுடன் இணைப்புச்சாலை

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் மானாமதுரை – தஞ்சாவூர் செல்லும் பை-பாஸ் ரோட்டிற்கும் இடையே புதிய இணைப்புச்சாலை ஏற்படுத்த வேண்டும்
என கோரிக்கை எழுந்துள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை வாணியங்குடி ஊராட்சி எல்கையில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு மானாமதுரை, சுந்தரநடப்பு, மேலகண்டனி வழியாக டவுன் பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து செல்கிறது.
இளையான்குடி, காரைக்குடி, திருப்புத்துார், திருமாஞ்சோலை பகுதிகளில் இருந்து சிகிச்சைக்கு வருவோர் மதுரை முக்குரோடு அல்லது சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இறங்கி ஆட்டோவில் வர வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை பெறும் நேரம் தாமதமாவதுடன், ஆட்டோ கட்டண செலவும் ஏற்படுகிறது.
காளையார்கோவில் பகுதிகளில் இருந்து விபத்துக்களில் சிக்கியவர்கள், கர்ப்பிணிகள் 108 ஆம்புலன்ஸ் வேன்களில் வரும்போது, சிவகங்கை நகராட்சி அலுவலக மேம்பாலம் வழியாக பஸ் ஸ்டாண்ட், அரண்மனை வாசல், மதுரை முக்குரோடு வரை சென்று போக்குவரத்து சிக்னலில் தேங்கி நிற்கும் வாகனங்களை கடந்து, மன்னர் துரைசிங்கம் கல்லுாரி வழியாக அம்பேத்கர் சிலையை சுற்றி அரசு மருத்துவமனைக்கு வர வேண்டியுள்ளது.
அரசு மருத்துவமனை வரை செல்லும் சாலையை எதிரே உள்ள மன்னர் கல்லுாரி மைதானம் வழியாக 500 மீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரை – தஞ்சாவூர் பைபாஸ் சாலையுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் மானாமதுரை, மதுரை, திருப்புத்துார் ரோடுகளில் இருந்து வரும் ஆம்புலன்ஸ் பைபாஸ் ரோடு வழியாகவே விரைவாக அரசு மருத்துவமனைக்கு வர முடியும்.
வரும் நவ., 18 ல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவிற்காக மன்னர் துரைசிங்கம் கல்லுாரி மைதானம்
தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவிற்கு வரும் வாகனங்களால் அம்பேத்கர் சிலை பகுதி, நேரு பஜார், காந்தி வீதி, அரண்மனை வாசல் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.
இதை தவிர்க்க வெளியூர்களில் இருந்த வரும் வாகனங்கள் சிவகங்கை நகருக்குள் நுழையாமல் பை-பாஸ் ரோடு வழியாகவே மன்னர் துரைசிங்கம் கல்லுாரி மைதானத்தை அடைய புதிய இணைப்பு சாலை ஏற்படுத்துவது அவசியமாகும்.
விழாவிற்கு வந்து திரும்பும் வாகனங்கள் அதே வழியாகவும், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு வழியாக மானாமதுரை செல்லவும் வழி ஏற்படுத்தினால் மட்டுமே சிவகங்கை நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாது.

You might also like More from author