சிவகங்கை மாவட்டத்தில் கந்துவட்டி புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் கந்துவட்டி குறித்து புகார் கூற விரும்புபவர்கள் 86086 00100 என்ற தொலைபேசியில் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். புகார்கள் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் சிவகங்கை, குன்றக்குடி, கீழசெவல்பட்டி, மானாமதுரை, திருப்பத்தூர், காளையார்கோவில் உள்பட 8 இடங்களில் பேரிகாட் வைக்கப்பட்டுள்ளது.

இது தவிர முக்கிய இடங்களில் போக்குவரத்து காவலர்களுக்கு ஒளிரும் பனியன்கள், சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 32 லட்சம் மதிப்பிலான பணிகள் செய்யப்பட்டுள்ளன.

தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் நடந்த தொடர் திருட்டுக்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் திருடர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள்.

பெண்கள், தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை தெரிவிக்கும் வகையில் மகளிர் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் கொண்ட மொபைல் வேன் செயல்பட்டு வருகிறது. இதில் நகரில் முக்கிய இடங்களில் காவல் துறையால் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த டாக்குமெண்டரி படம் காண்பிக்கப்படுகிறது.

வீடுகளில் உள்ள பெண்களை மகளிர் போலீசார் சந்தித்து பேசுவார்கள். பிரச்சினைகளை அவர்களிடம் தெரிவிக்கலாம்.

கொலை, வழிப்பறி, கொள்ளைகளில் ஈடுபட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டவர்கள் 58 பேர்களில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 34 வழக்குகளில் 58 பேர் தேடப்பட்டு வந்தனர். மீதம் உள்ள குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தனிப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷ், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

You might also like More from author