சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்களில் பொது விருந்து – சென்னை கோவிலில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்திய சுதந்திரத் திருநாள் அன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பு திட்டத்தின்படி, நிதி வசதி மிக்க கோவில்களில் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாளை (செவ்வாய்க் கிழமை) 454 கோவில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்குபெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட உள்ளது.

இவ்விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு கோவில்களில் காணிக்கையாகப் பெறப்பட்டு உபரியாக உள்ள பருத்தி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளன. மாவட்டங்களில் உள்ள கோவில்களில் கலெக்டர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

சென்னை மாநகரப் பகுதிகளில் நடைபெறும் சிறப்புமிகு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் சட்டசபை சபாநாயகர், முதல்- அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர் பங்கேற்க உள்ளனர். அந்தவகையில் சென்னை, கே.கே.நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like More from author