சென்னைக்கு வந்த போர்க் கப்பல் : முதல்வர் பெருமிதம்!

ஐ.என்.எஸ். சென்னை போர்கப்பல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சென்னை நகருக்கு நேற்று அர்ப்பணிக்கப்பட்டது.

இந்திய கடற்படை போர்க் கப்பல்களை உருவாக்கி, நாட்டின் முக்கிய தலைநகரங்களின் பெயர்களை வைத்து, அந்நகரங்களுக்கு அர்ப்பணிப்பது வழக்கம். ஐ.என்.எஸ். மும்பை, ஐ.என்.எஸ். கொச்சி  ஆகிய போர்க் கப்பல்கள் வரிசையில் தற்போது ஐ.என்.எஸ். சென்னை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ‘ஐ.என்.எஸ். சென்னை’, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் இப்போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஐ.என்.எஸ். சென்னை போர்க் கப்பலை சென்னைக்கு அர்ப்பணிக்கும் விழா  சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு போர்க் கப்பலின் மாதிரியைப் பெற்றுக் கொண்டார். மேலும் நினைவுப் பரிசு ஒன்றை இந்திய கடற்படையின் கிழக்கு மண்டலத் தலைமை அதிகாரி பிஷ்ட்டிடம் முதல்வர் வழங்கினார். விழா முடிந்ததும் போர் கப்பலின் உள்ளே சென்று பார்வையிட்டார்.

விழாவில் பேசிய முதல்வர், “இந்த பெருமைமிகு விழாவில் கலந்துகொள்வதில் பெருமை அடைகிறேன். தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசு அதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்”, என்றார்.

ஐ.என்.எஸ். சென்னையின் அம்சங்கள் : 7,500 டன் எடை மற்றும் 164 மீட்டர் நீளமுடையது.  மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட போர்க் கப்பல் இது. கடலின் மேற்பரப்பு, கடலின் அடி பரப்பு, ஆகாயம் என மூன்று நிலைகளில் தாக்குதல் நடத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author