செம்மரம் வெட்டி கடத்த சதி திட்டம் – 5 பேர் கைது

திருவண்ணாமலை மார்ச் 24:

திருவண்ணாமலை அருகே ஆந்திராவுக்கு செம்மரம்
கடத்த சதிதிட்டம் தீட்டிய 5பேரை போலீசார் கைது செய்தனர் திருவண்ணாமலை
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.பொன்னி உத்தரவின்பேரில் போளூர்
காவல்துறை துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் கலசபாக்கம் காவல்நிலைய
ஆய்வாளர் ராஜகோபால், ஜமுனாமரத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள்
விஜயகுமாரன், சிவகாம்பு, ஆனந்தன், மற்றும் போலீசார் ஜமுனாமரத்தூர்
பகுதியில்  (ஜவ்வாதுமலை) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் பின்னர்
நீப்பாளம் பட்டு , அமிர்தி, நம்மியம்பட்டு ஆகிய இடங்களில் ரோந்து
சென்றுவிட்டு புதுப்பட்டு கூட்ரோட்டுக்கு வந்தபோது 5 பேர் கும்பலாக
அமர்ந்துபேசிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல்
தப்பியோடினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை துரத்திச் சென்று
மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மலைக்கொள்ளை கிராமத்தைச்
சேர்ந்த தெய்வேந்திரன் (37), புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார்
(24), இளையராஜா (27) துரைராஜ் (31), சேகர் (27) என்பதும் அதிக கூலிக்காக
ஆந்திரா சென்று செம்மரங்களை வெட்டி கடத்த சதிதிட்டம் தீட்டியதும்
தெரியவந்தது. போலீசார் உடனடியாக அவர்கள் 5 பேரையும் கைது செய்து
அவர்களிடம் இருந்த கத்தி, கோடாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

You might also like More from author