சோணநதி காட்டுப்பகுதியில் 545 மரங்களை வெட்டிவிட்டு யாத்திரை நிவாஸ் கட்டுவதற்கு எதிர்ப்பு இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, மார். 11:

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சோணநதி
காட்டுப்பகுதியில் 545 மரங்களை வெட்டி விட்டு யாத்திரை நிவாஸ் கட்டும்
திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திருவண்ணாமலையில் இளைஞர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் உள்ள புகழ் மிக்க மலை
சுற்றும் பாதையில் வளர்ச்சி பணிகளை செய்வது என்ற பெயரில் ஒரு பெரும்
இயற்கை வளத்தை அழிக்கும் சதி திட்டம் மெல்ல மெல்ல அரங்கேறி வருகிறது.
இதற்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் பசுமை
வாய்ந்த மருத்துவம் குணம் கொண்ட கிரிவலப் பாதையிலுள்ள சோணநதி
காட்டுப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அவசர அவசரமாக அண்ணாமலையார் கோவில்
நிர்வாகத்திற்கு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் கிரிவலப் பாதையில்
பக்தர்களுக்கு யாத்திரை நிவாஸ் என்னும் சொகுசு விடுதி ஒன்றை கட்டுவதற்காக
சோணநதி காட்டுபகுதியில் உள்ள 545 மரங்களை வெட்டி அப்புறப்படுத்துமாறு
குறிப்பிட்டுள்ளது. சோணநதி பகுதியில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது என
பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை
உத்தரவிட்டிருப்பதற்கு பல்வேறு அமைப்புகள் பல்வேறு அரசியல் கட்சிகள்
எதிர்ப்பு தெரிவித்துள்ளன இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில்
நேற்று (வெள்ளிகிழமை) தி.மலை ஜல்லிக்கட்டு போராட்டக்குழு சார்பில்
இளைஞர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து காலை 9 மணிமுதல்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை கிரிவலப்பாதையிலுள்ள
சோணநதி காட்டுபகுதியில் 545 மரங்களை வெட்டிவிட்டு யாத்திரை நிவாஸ்
கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் இந்து
அறநிலையத்துறைக்குஎதிர்ப்பு தெரிவித்தும், திருவண்ணாமலை நகர பகுதியில்
அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான பல இடங்களும், நிலங்களும் பலரால்
ஆக்கிரமித்து வைத்திருப்பதை மீட்டெடுத்து அந்த பகுதியில் யாத்திரை
நிவாஸ்களை கட்டி பக்தர்களுக்கு வசதி செய்து தாருங்கள் என இளைஞர்கள்
கையில் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது
திடீரென நேற்று காலை 11 மணியளவில் இந்த திட்டம் கைவிடப்பட்டது என இந்து
சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இளைஞர்கள் மாணவர்கள்
இதற்கான போராட்டத்தை கைவிட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author