ஜெயலலிதாவை சசிகலா வீடியோ எடுத்த விவகாரம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை – அன்புமணி ராமதாஸ்

சென்னை:

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஜெயலலிதா சிகிச்சை பெறும் போது அவரை சசிகலா வீடியோ எடுத்ததாகவும், அப்போது ஜெயலலிதா உடல் மெலிந்து இருந்ததால் தான் அந்த வீடியோவை சசிகலா வெளியிடவில்லை என்றும் கூறியிருக்கிறார். மருத்துவ அடிப்படையில் பார்த்தால் தினகரனின் இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை.

ஒருவேளை தினகரன் கூறுவது போன்று, சசிகலா வீடியோ எடுக்கும்போது ஜெயலலிதா இளைத்து காணப்பட்டிருந்தால் இறக்கும் போதும் அப்படியே தான் இருந்திருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் அவரது உடல் பருத்திருப்பதற்கு சாத்தியமில்லை. அவ்வாறு இருக்கும் போது தினகரன் கூறியிருப்பது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.

ஜெயலலிதா மரணம் குறித்து அ.தி.மு.க. அணிகளின் நிர்வாகிகள் கூறும் ஒவ்வொரு விளக்கத்திற்கு பின்னணியிலும் ஓர் அரசியல் கணக்கு உள்ளது. இவை எதுவுமே ஜெயலலிதா மரண மர்மத்தை போக்காது. எந்த ஒரு மனிதரின் மரணமும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்படக்கூடாது. ஆனால், தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மரணம், அவரது கட்சியினராலேயே இந்த அளவுக்கு சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுவது அவரது விசுவாசிகளை வேதனைக்குள்ளாக்கி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையமோ, சசிகலா தரப்பு வெளியிடவுள்ள வீடியோவோ ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை போக்கப்போவதில்லை. மத்திய புலனாய்வு பிரிவின் (சி.பி.ஐ.) விசாரணை மட்டுமே ஜெயலலிதா மரணம் குறித்த மர்மத்திற்கு விடைகாணும் என்பதால் அதற்கு ஆணையிட தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like More from author