Home தமிழகம் ஜெயலலிதா உடல்நிலை: அப்போலோவில் பரபரப்பு

ஜெயலலிதா உடல்நிலை: அப்போலோவில் பரபரப்பு

44

அப்போலோ, எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய மிகப் பெரிய சிறப்புக் குழு, முதல்வர் ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக, திங்கட்கிழமை மாலை 5.49 மணிக்கு அப்போலோ மருத்துவமனை தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனைகள் தலைமை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையில், ”அப்போலோ சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் முதல்வரின் உடல்நிலையை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

சில தனியார் தொலைக்காட்சிகள் முதல்வர் ஜெயலலிதா பற்றி தவறான தகவல் வெளியிட்டுள்ளன. இந்த செய்தி அடிப்படை இல்லாததும், பொய்யானதும் ஆகும். இந்த அறிக்கையைக் கொண்டு அவர் தங்கள் தவறை திருத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தவறான தகவல் வெளியானதால் தமிழகம் முழுவதும் அதிமுக கொடிக்கம்பங்கள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு பிறகு முழுக்கம்பத்தில் ஏற்றப்பட்டன. விரிவான செய்திக்கு அதிமுக கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு ஏற்றியதால் சலசலப்பு

சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மாலை 6.30 மணியளவில் வந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினரிடம் விசாரித்தார்.

முன்னதாக, மாலை 5.30 மணியளவில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த முதல்வர் காலமானதாக தவறான செய்திகள் வெளியாகின. தமிழின் சில செய்தித் தொலைக்காட்சி சேனல்கள் முதல்வர் ஜெயலலிதா காலமானதாக அண்மைச் செய்திகள் வெளியிட்டன. உடனடியாக அந்த செய்திகள் அதே சேனல்களால் திரும்பப் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து, மருத்துவமனயில் பரபரப்பு ஏற்பட்டது.

தொண்டர்கள் மருத்துவமனைக்குள் நுழைய முற்பட்டதால், போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். தொண்டர்களும் அங்கிருந்த நாற்காலிகள் விளம்பர போர்டுகள் மற்றும் தடுப்புகளை தூக்கி அடித்தனர். கற்களையும் எடுத்து வீசினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

முந்தைய செய்திப் பதிவுகள்:

முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், முதல்வரின் உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் ட்விட்டரில் மாலை 5 மணியளவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*

எங்களது அத்தனை சிறப்பான முயற்சிகளுக்குப் பின்னரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என அப்போலோ மருத்துவமனையின் இயக்குநர் சங்கீதா ரெட்டி தெரிவித்துள்ளார்.

*

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து சிக்கலாக இருப்பதாகவும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் சென்னை அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதை அப்போலோ மருத்துவமனை செய்திக்குறிப்பு மூலம் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) ஓர் அறிக்கையை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் நிலை தொடர்ந்து சிக்கலாக இருக்கிறது. அவருக்கு எக்மோ கருவி மற்றும் பிற உயிர் காக்கும் கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கூர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவக் குழு:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு சென்னைக்கு விரைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ மருத்துவமனை செய்தி குறிப்பு மூலம் தெரியப்படுத்தியது.

இதனையடுத்து அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்போலோ மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதய நோய் நிபுணர்கள், சுவாசயியல் நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு சென்னைக்கு விரைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் 3 மணியளாவில் எய்ம்ஸ் மருத்துவக் குழு சென்னை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் மேலும் கூறும்போது, “டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கில்நானி, நரங், தல்வார், மற்றும் மருத்துவர் த்ரிகா ஆகிய 4 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு சென்னைக்கு விரைந்துள்ளது. அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களுடன் இணைந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர்கள் சிகிச்சை அளிப்பர்.

தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களுடன் தொடர்ந்து முதல்வர் உடல்நிலை தொடர்பான விவரங்களை கேட்டறிந்து வருகிறோம்.

ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். தமிழக அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

எக்மோ உதவியுடன் சிகிச்சை:

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிகாலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது இதயம் சீராக செயல்படுவதற்கான கருவி (extracorporeal membrane heart assist device) பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

’சட்டம் ஒழுங்கில் பாதிப்பில்லை’

”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பில்லை. தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக 1 லட்சம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை” என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கோரினால்..

தமிழக அரசு கோரினால் மத்திய பாதுகாப்புப் படைகளை அனுப்ப தயாராக இருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலையை காக்க போதிய படைகள் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் இருந்து முறைப்படி கோரிக்கை வரவேண்டும். அவ்வாறு வராதபட்சத்தில் மத்திய அரசு தானாக தலையிட முடியாது. தமிழக அரசு கோரினால் மத்திய பாதுகாப்புப் படைகளை அனுப்ப தயாராக உள்ளது” என்றார்.

‘முதல்வர் நலம்பெற காத்திருப்போம்’

”முதல்வர் சிக்கலான நிலையில் இருக்கிறார் என்பதை யூகிக்க வேண்டி இருக்கிறது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், ராஜ்நாத் சிங் சென்னைக்கு வர இருப்பது, சட்டம்- ஒழுங்கை பாதுக்காக போலீஸார் செய்துள்ள முன்னேற்பாடுகள் ஆகியவை முதல்வர் நலம் பெற வேண்டும் என்ற நம்பிக்கையை கரைத்துக் கொண்டிருக்கிறது.முதல்வர் நலம் பெற வேண்டும் என காத்திருப்போம்” என்று விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். முழுமையான செய்திக்கு: | முதல்வர் நலம் பெறக் காத்திருப்போம்: திருமாவளவன் |

வெங்கய்யா சென்னை வருவதாக தகவல்:

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தமிழகம் வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் வெங்கய்ய நாயுடு சென்னை வரவிருப்பதாகவும் அப்போலோ மருத்துவர்களிடம் முதல்வர் உடல்நிலை குறித்து விசாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக – கேரள எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு:

தமிழகத்தை ஒட்டிய கேரள எல்லைப் பகுதிகளான திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, பாலக்காடு மாவட்டங்களில் அம்மாநில போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதையடுத்து பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

இதேபோல், சபரிமலை கோயிலில் சில இடங்களில் போலீஸார் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கிரண் பேடி நம்பிக்கை:

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற தான் பிரார்த்தனை செய்வதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். அப்போலோ மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா மீது கோடிக்கணக்கான மக்கள் அன்பும், மரியாதையும் செலுத்தி வருவதாகக் கூறினார்.

‘வெளிநாட்டு சிகிச்சை அவசியம்’

“தமிழக முதல்வரை இங்கிலாந்து அல்லது மற்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவ உதவி அளிப்பது பற்றி முடிவு செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்” விவரம் அறிய: | முதல்வரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கவேண்டும்: வீரமணி |

‘மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும்’

“தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும், பின்பு மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அனைவரோடும் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வாழ்த்துகிறது, பிரார்த்திக்கிறது” என்று” ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். மேலும் செய்திக்கு: | முதல்வர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறோம்: வாசன் | ‘மக்கள் பிரார்த்தனை வீண் போகாது’

‘தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற எல்லோரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மக்களின் பிரார்த்தனை வீண் போகாது. முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற என் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் பிரார்த்திக்கிறேன்’ என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். | முழு விவரம் அறிய: மக்களின் பிரார்த்தனை வீண் போகாது: திருநாவுக்கரசர் |

முதல்வர் மீண்டு வருவார்: முத்தரசன்

“மருத்துவர்களின் தொடர் முயற்சியால் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பூரண குணமடைந்து இல்லம் திரும்பி, தனது பணிகளை தொடங்கிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட அனைத்து சோதனைகளையும் வென்று வந்தவர். தற்போதும் வெற்றி பெற்று வருவார், வர வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு: | முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைவார்: முத்தரசன் நம்பிக்கை |

ராமதாஸ் வேண்டுகோள்:

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டும் என விரும்புவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து ஆதாரமற்ற செய்திகளை பரப்புதல், வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட செய்திகளை அனைத்துத் தரப்பினரும் தவிர்க்க வேண்டும்.

அதன்மூலம் தமிழகத்தில் பதற்றம் ஏற்படாமல் தவிர்க்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் விவரம் அறிய: | முதல்வர் ஜெயலலிதா விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டும்: ராமதாஸ் |

செப்டம்பர் 22-ம் தேதி முதல்..

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு – க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பநிலையில் அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் அவருக்கு நுரையீரலில் நோய் தொற்று ஏற்பட்டதை மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதனையடுத்து, அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சட் பியெல் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்களும் சிகிச்சை அளித்து வந்தனர். அண்மையில்தான் முதல்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், ஞாயிறு மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.