ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் எடுத்தது யார்?: சு.திருநாவுக்கரசர் கேள்வி

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டு உள்ள விசாரணை கமிஷனில், திறமைவாய்ந்த டாக்டர் குழுவினரும் இடம்பெற வேண்டும். அவர்களும் விசாரணையில் உதவவேண்டும். ஏனென்றால் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருந்துகள் சரியானவை தானா? என்பது டாக்டர்களுக்கு தான் தெரியும்.

இந்த விசாரணை கமிஷனின் திட்ட காலம் என்ன? கமிஷனின் அறிக்கை எப்போது வெளியிடப்படும்? இதெல்லாம் கமிஷன் தொடங்கப்பட்ட சமயமே தெரிவித்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட தகவல்கள் இதுவரை வரவில்லை. இந்த தகவல்கள் மக்களுக்கு சொல்லப்பட வேண்டும். விசாரணை முழுமையாக நடைபெற வேண்டும். ஒரு பெரிய கட்சியின் பொதுச்செயலாளராக, மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். டெல்லியில் இருக்கும் சம்பந்தப்பட்டவர்களும் விசாரிக்கப்பட வேண்டும்.

ஒரு முதல்-அமைச்சர் 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரை பார்க்க பிரதமர் மோடி ஏன் வரவில்லை? இதுகுறித்து பிரதமரின் அக்கறை என்ன?. ஜெயலலிதாவை ஏன் மேல்சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பவில்லை? ஜெயலலிதா விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் யார் எடுத்தது?.

ஒரு முதல்-அமைச்சர் மரணம் அடைந்தது சாதாரண விஷயமல்ல. இதற்கு மாநில அரசு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் பொறுப்பு உண்டு. ஒரு முதல்-அமைச்சர் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும்போது மத்திய அரசு என்ன செய்தது? என்ற எல்லா உண்மைகளும் நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்லப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி டி.வி.பார்க்கும் வீடியோவை வெளியிடுவதா? வேண்டாமா? என்று யோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். சிக்கலுக்கு மேல் சிக்கலாக ஏதோ மர்மம் தொடருவதாக ஏதேதோ தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட கருத்துகளை பரவவிடுவது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெருமைக்கு, பெருமை சேர்க்காது. ஜெயலலிதா மரணம் குறித்த மக்களின் சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் அரசியல் காரணத்திற்காக அவரது மரணம் பயன்படுத்தப்படும். அது சரியான நடவடிக்கையாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா மரணம் தொடர்பான விவரங்களை எப்போதோ தெளிவு படுத்தியிருக்க வேண்டும். மக்களுக்கு எண்ணற்ற சந்தேகங்களும், வெறுப்பும் இந்த சமயத்தில் எதையுமே செய்யவில்லை. இப்போது பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிற மக்களை திசை திருப்புவதற்கு, ஊடகங்களையும் வெவ்வேறு திசைகளில் விவாதிக்க வைப்பதற்கு தேவையில்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like More from author