டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகை

திருவண்ணாமலை, மே 18:

திருவண்ணாமலை அடுத்த லாடவரம் கிராமத்தில் அரசு
(டாஸ்மாக்) மதுபான கடை உள்ளது. கடையின் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி
கோவில் ஆகியவை உள்ளன. இவ்வழியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
மதுப்பிரியர்கள் போதையில் அவ்வழியாக செல்லும் பெண்களிடம் தினமும் தகராறு
செய்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற
வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த 15 நாட்களுக்கு
முன்பு இக்கடையை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது
சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் 15 நாட்களுக்குள் இக்கடையை அகற்றப்படும்
என்று உறுதியளித்தனர். ஆனால் நேற்று முன்தினத்தோடு அதிகாரிகள் கொடுத்த
கால அவகாசம் முடிந்த நிலையிலும் அந்த டாஸ்மாக் கடை அகற்றப்படாததால்
ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று முற்றுகை
போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கலசபாக்கம் காவல்துறை ஆய்வாளர்
கோபால் , உதவி அய்வாளர் நாகமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இன்னும் 3 நாட்களுக்குள் கடை அகற்றப்படும் அதுவரை இந்த கடை திறக்கப்படாது
என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் முற்றுகை
போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

You might also like More from author