டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 50 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம்

சென்னை:

சென்னையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தடுக்க தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணாநகரில் உள்ள இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரி வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் இன்று நடந்தது.

சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அமைச்சர் சி.விஜயபாஸ்கர் டெங்கு விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார். மேலும் 35 வாகனங்களில் சென்னை நகர் முழுவதும் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

அங்கு வந்திருந்த ஆட்டோ டிரைவர்கள், பொது மக்களுக்கு நிலவேம்பு குடி நீரை வழங்கினார். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் காய்ச்சல் வந்தாலே உடனே மருத்துவரை அணுக வேண்டும். கால தாமதமாக வருவதால் தான் உயிர் இழப்பு ஏற்படுகிறது.

டெங்கு காய்ச்சல் குணப்படுத்த கூடிய ஒன்று. பொது மக்கள் பீதி அடைய தேவையில்லை. காய்ச்சல் பாதிக்கப்பட்டவரின் உடலில் தட்டணுக்கள் குறைந்தால் அதனை ஏற்றுவதற்கு அரசு ஆஸ்பத்திரிகளில் தட்டணுக்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது.

டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கு பொது மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குடிநீரை சேமித்து வைத்திருக்கும் தொடர்புகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. அதனை குடித்தால் டெங்கு பாதிப்பு ஏற்படாது. தற்போது வீடு வீடாக கொடுக்கும் வகையில் வாகனங்களில் நிலவேம்பு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

30 ஆட்டோ மற்றும் 5 ஜீப்புகளில் சென்னை நகரம் முழுவதும் பொது மக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். 3 நாட்களுக்கு நகரின் அனைத்து பகுதியிலும் 50 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் கொடுக்க திட்டமிட் டுள்ளோம்.

டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.16 கோடியே 41 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வியாழக் கிழமையும் கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படும். அரசு அலுவலகங்களில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி, கோகுல இந்திரா, கூடுதல் செயலாளர் மோகன் பியாரே, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தை சாமி, இணை இயக்குனர் பார்த்திபன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like More from author