Oct 9, 2017
12 Views
0 0

டெங்கு காய்ச்சல் பாதிப்பை தமிழக அரசு மூடிமறைக்கிறது: கனிமொழி பேட்டி

Written by
banner

கோவை:

கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் எத்தனை பேர் பலியாகி உள்ளனர் என்பது குறித்து தமிழக அரசு கணக்கிடவில்லை. டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிர் இழப்புகள் அதிகமாகி உள்ளது. ஆனால் உண்மை நிலவரம் என்ன என்பதை இந்த அரசு வெளியே சொல்லாமல் மூடிமறைக்கிறது. டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் கூட அரசு அக்கறை காட்டவில்லை.

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கான முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட வில்லை. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி இருந்தால் அதில் இருப்பவர்கள் இந்த பணிகளை சரியாக செய்து இருப்பார்கள் என கூறி இருந்தார். அதையும் தமிழக அரசு செய்யவில்லை.

அரசு விழாவுக்கு என்று ஒரு மரபு உள்ளது. அரசு விழாவில் எதிர்க்கட்சிகளை விமர்சித்து தரக்குறைவாக பேசுவது தவறான நடைமுறையாகும். அரசியல் தெரியாதவர்கள் செய்யும் செயல். அரசு விழாவில் தமது அரசின் சாதனைகளை மட்டும்தான் எடுத்து பேச வேண்டும். ஆனால் இந்த அரசுக்கு சொல்வதற்கு சாதனைகள் எதுவும் இல்லை.

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தி.மு.க. தலைவர் தான் சட்டத்தை கொண்டு வந்தார். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் போய் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் வந்த அ.தி.மு.க. அரசாங்கம் உரிய முறையில் வாதாடாமல் விட்டு விட்டது. இதனால் இந்த வழக்கில் நியாயம் கிடைக்காத நிலை உள்ளது.

புதிய கவர்னர் ஜனநாயக மரபுகளை காப்பாற்ற வேண்டும். அ.தி.மு.க.வை பா.ஜனதா ஆட்டுவிப்பதாக கூறப்படும் கருத்து நிதர்சனமானது. வாக்காளர் சிறப்பு முகாமில் போலி வாக்காளர்களை சேர்ப்பதை தான் அவர்கள் (அ.தி.மு.க.) வழக்கமாக செய்து கொண்டு இருக்கிறார்கள். இதை நிச்சயமாக தி.மு.க.வினர் தடுத்து நிறுத்துவார்கள்.

தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை முடித்த பிறகு செயல் தலைவர் அதை சொல்வார். இலக்கு என்று ஒன்றும் இல்லை. தமிழ்நாடே தி.மு.க. பக்கம் தான் நின்று கொண்டு இருக்கிறது. எங்களுக்காக அதை கூறவில்லை. உங்களுக்காக தான் கூறுகிறோம். அவர்களுக்குள் உள்ள சண்டை, சச்சரவுகள், நிர்வாக சீர்கேடு ஆகியவற்றால் இந்த ஆட்சி தொடர கூடாது என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.

ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் மாறி, மாறி பேசுவது வருத்தப்பட வேண்டிய விஷயம். கட்சி தலைவரின் மரணம் குறித்து அவரது கட்சியும், அதை சார்ந்தவர்களிடமும் வெளிப்படைத்தன்மை இல்லை. முன்பு அமைச்சர்கள் நாங்கள் நேரில் பார்த்தாக கூறியிருந்தனர். தற்போது அரசியலுக்காக மேடை ஏறி வேறுவிதமாக பேசுகிறார்கள். இதெல்லாம் மக்களுக்கு அவர்கள் மீது அவநம்பிக்கையை தான் ஏற்படுத்தும். தங்களது தலைவரின் உடல் நலம் பற்றி தவறான செய்திகள் சொல்பவர்கள் யாருக்கு உண்மையாக நடந்து கொள்வார்கள்?

இவ்வாறு அவர் கூறினார்.

Article Categories:
தமிழகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *