டெல்லியில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு

புதுடெல்லி:

டெல்லியில் மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் ஆகியோரை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.

பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் அமைத்து தூய்மையை கடைப்பிடித்ததில் இந்தியாவில் தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்து உள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த விருதை பெறுவதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று டெல்லி சென்றார்.

அங்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரை, அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். மேலும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை ராஜாங்க மந்திரி நிர்மலா சீதாராமனையும் செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கும் விருதை பெறுவதற்காக நான் டெல்லி வந்து இருக்கிறேன். அத்துடன் தமிழக கல்வித்துறைக்கு தேவையான நிதியை பெற வேண்டும் என்ற முறையிலும் எனது பயணம் அமைந்து உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் ஆகியவற்றுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2,248 கோடியே 79 லட்சம் நிதி மத்திய அரசிடம் இருந்து வரவேண்டியுள்ளது. அதை உடனே வழங்க வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டு துறை மந்திரியிடம் கோரிக்கை விடுத்தேன்.

அதற்கு அவர், விரைவில் அந்த நிதியை ஒதுக்க முயற்சி மேற்கொள்வதாக தெரிவித்தார்.

நிச்சயமாக நான் அரசியல் நோக்கத்துக்காக டெல்லி வரவில்லை.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

இதைத்தொடர்ந்து நிருபர்கள், ‘கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்தீர்கள் சரி, நிர்மலா சீதாராமனை ஏன் சந்தித்தீர்கள்? டெல்லி வரும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் அவரை சந்திக்க காரணம் என்ன? அவரை அடிக்கடி சந்திப்பது ஏன்?‘ என்று கேட்டனர்.

அதற்கு, ‘மற்ற அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனை ஏன் சந்திக்கிறார்கள்? என்று தெரியவில்லை. இதை அவர்களிடம் கேளுங்கள். சரக்கு, சேவை வரி தொடர்பாக தமிழ்நாட்டில் அவரை நான் சந்தித்தேன். டெல்லிக்கு வரும்போது சந்திக்குமாறு அவர் ஏற்கனவே கூறி இருந்ததாலும், அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற முறையிலும் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்‘ என்று செங்கோட்டையன் பதில் அளித்தார்.

பிரகாஷ் ஜவடேகரிடம் நீட் தேர்வு பற்றி ஏதும் கேட்டீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு செங்கோட்டையன் பதில் அளிக்கையில், ‘நீட் தேர்வு தொடர்பாக முதல்- அமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள் ஏற்கனவே பேசி உள்ளனர். நீட் தேர்வை பொறுத்தவரை எதிர்காலத்தில் மாணவர்களை அதற்கு தயார்படுத்த வேண்டும் என்று முதல்- அமைச்சர் சொல்லி இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்தியா முழுவதும் நீட் தேர்வு எப்படி நடத்தப்பட்டது என்பதை ஆராய்ந்து தேர்வுக்கான 54 ஆயிரம் கேள்வி-பதில்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் தயார் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக பள்ளிக்கல்வித்துறை பணியாற்றி வருகிறது‘ என்று கூறினார்.

You might also like More from author