தமிழகம் முழுவதும் 11-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: திருமாவளவன் அறிக்கை

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் பத்து பேர் என டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் 500-க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவுக்கு பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தமிழக அரசு டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காதது மட்டுமின்றி டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக்காட்டி உண்மையை மூடி மறைத்து வருகிறது.

முந்தைய ஆண்டுகளைவிட தற்போது டெங்கு மரணம் அதிகமாக இருப்பதற்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளாட்சி அமைப்புகள் முடக்கப்பட்டிருப்பதும் ஒரு காரணமாகும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. கொள்ளைநோய் சட்டம் அதற்கு வழி செய்கிறது. ஆனால் பா.ஜ.க.வின் முன்னணித்தலைவர்கள் மாநில அரசை மட்டும் குறை கூறி பேசி வருகின்றனர். டெங்குவிலும் அரசியல் ஆதாயம் தேடும் அவர்களது செயல் வேதனையளிக்கிறது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு சிகிச்சையை உள்ளடக்க வேண்டுமென வலியுறுத்தியும் 11-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில், எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

You might also like More from author