Feb 8, 2017
14 Views
0 0

திமுகவின் சதித் திட்டத்திற்கு ஓபிஎஸ் பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா

Written by
banner

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று சசிகலா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் 129பேரும், கூட்டணி கட்சியைச் சேர்ந்த கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய சசிகலா, திமுகவில் ஓ.பன்னீர் செல்வம் ஐக்கியமாகிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

சசிகலா மீது ஓபிஎஸ் பரபரப்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பின்னர் நடைபெற்ற கூட்டம் என்பதால் அதிக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய சசிகலா, நம்மை பிரித்தாளும் சக்தி யாருக்கும் இல்லை என்று கூறினார்.

ஜெயலலிதா மறைந்த போது, இந்த கழக குடும்பத்தில் கலகம் வராதா என்று, கண்ணி வைத்து காத்திருந்தார்கள். எதுவும் நடக்கவில்லை. அம்மா கட்டிக்காத்த குடும்பத்தில் அன்புதான் மேலோங்கி நின்றது, கட்டுப்பாடுதான் ஓங்கி நின்றது.

திமுகவின் சதி

திமுகவின் சதித் திட்டத்திற்கு பலர் துணை போனார்கள், பலர் புழுதி வாரித் தூற்றினார்கள். இப்போது ஒருவர், அம்மா அவர்களின் மறைவின் போது நான் எடுத்த முடிவு, அவர் முதல்வராக தொடர வேண்டும் என்று. அப்போது பலரும் ஓ. பன்னீர்செல்வம் உட்பட, என்னை பொறுப்பேற்கச் சொல்லி நிர்பந்தம் செய்தார்கள். அப்போது எதையும் ஏற்கும் மனநிலையில் நான் இல்லை.

மன்னிப்பு

அதிமுக அன்று பிளவுபட்ட நிலையில், மாற்று அணியில் இருந்து அவர் செய்த செயல்களை எல்லாம் கருணை உள்ளத்தோடு மன்னித்துதான் நம் ஜெயலலிதா அவருக்கு வாய்ப்பு வழங்கினார்கள். பலமுறை அந்த வாய்ப்பைப் பெற்றார். அந்த வழியில் தான் நானும் செயல்பட்டேன்.

திமுக உடன் கைகோர்த்தார்

அதன் பின்னால் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தையும் நான் உற்று நோக்கிய நிலையில், சட்டமன்ற நிகழ்வுகளில் ஜெயலலிதாவை அழிக்கத் துடித்த திமுகவுடன் கழகத்திற்கு கேட்டையும், நாசத்தையும் விளைவித்த திமுகவுடனான அவரின் செயல்கள், ஜெயலலிதா எதற்காக போராடினாரோ, கடைக்கோடித் தொண்டர்கள் எதற்காகப் போராடினார்களோ அதனை ஈடேற்றும் விதத்தில் அமைந்திடவில்லை.

ஜெயலலிதா வழியில் பயணம்

ஜெயலலிதா இல்லாத இந்த நேரத்தில், முதல்வர் பதவியில் அமர்ந்து விட்டதால், அவர் வகுத்த பாதையில் இருந்து விலகிட முடியாது. இங்கு முதலமைச்சர் என்கிற சொல்லைக் காட்டிலும் அம்மா என்கிற சொல்லுக்கு மதிப்பு அதிகம். ஜெயலலிதாவின் கனவுதான் நம் பார்வை. நான் அன்றே சொன்னேன், ஜெயலலிதாவின் வழியில் தான் நம் பாதை. அவர் காட்டிய பாதையில்தான் நமது பயணம் என்பதைச் சொன்னேன். இதைத் தாண்டி யார் நடந்தாலும், நடித்தாலும் அந்த நடையை, நடிப்பை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கண்டுபிடித்துவிடும்.

நான் அஞ்சமாட்டேன்

இத்தனை நாட்கள் வராத எதிர்ப்பு, நம் எதிரிகளிடமிருந்து புறப்படுகிறது என்றால் என்ன அர்த்தம். நம் எதிரிகள் விரும்பாதது இங்கு நடக்கிறது. அதனால் தான் இந்த சலசலப்பு. இதற்கெல்லாம் அதிமுக அஞ்சாது, நானும் அஞ்சமாட்டேன். அம்மாவின் கனவுகளும், அவர் இதயத்தில் தாங்கிய கணலும் என்றும் நம்மிடம் இருக்க வேண்டும். அவை நிறைவேற்றப்பட வேண்டும். எந்த சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது.

ரகசிய கூட்டமல்ல

காரணம் ஜெயலலிதா என்கிற சக்தி நம்மிடமுண்டு. கடந்த 5ஆம் தேதி நடந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் என்பது ரகசியக் கூட்டமல்ல. அது பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் வெளிவந்த செய்திதான். அது, கடைசி நேரத்தில் தான் தனக்கு தெரிய வந்தது என்பது போன்ற ஓ. பன்னீர்செல்வத்தின் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள். கட்டாயப்படுத்தினார்கள் என்கிறார், என்னை சட்டமன்ற குழு தலைவராக முன்மொழிந்தவர், என் அருகில் அமர்ந்து உரையாடிக் கொண்டுதான் இருந்தார்.

யார் ஆசை காட்டினார்கள்

48 மணி நேரம் கழித்து ஒரு பொய்யை சொல்கிறார் என்றால், அந்த இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன? யார் யாருடன் ஆலோசித்தார். திமுக-வைச் சேர்ந்த துரைமுருகன் சட்டமன்றத்தில் பேசியது போல், கருத்து வேறு வகையிலும் பரிமாறப்பட்டதா? ஆசைகாட்டப்பட்டதா?

திமுகவில் ஐக்கியமாவிட்டார்

ஓபிஎஸ் சட்டசபையில் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து துரைமுருகன் பேசும் போது, அதற்கு எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் அப்போதே ஓ. பன்னீர்செல்வம் மவுனம் காத்த செயல், அவர் திமுகவில் ஐக்கியம் ஆகிவிட்டதை என்னால் நன்கு உணர முடிந்தது. அவரின் இந்தச் செயலால், அமைச்சர்கள் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மிகுந்த கொதிப்படைந்தனர்.

நான் கண்டித்தேன்

அவருக்கு நெருடல் ஏற்படும் வகையில் அமைச்சர்களும், தொண்டர்களும் கருத்து தெரிவித்த வேளையில், என்னிடம் அதை அவர் சொன்ன போது, அதற்கு உரிய மதிப்பளித்து, அமைச்சர்களிடமும், சட்டசபை உறுப்பினர்களிடமும், மற்ற கழகத்தினரிடமும், அவ்வாறு கருத்து சொல்ல வேண்டாம் என்று நான் கண்டித்தேன்.

முக்கியத்துவம் கொடுத்தேன்

ஓ. பன்னீர்செல்வம் கருத்துக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கினேன். ஆனால், சட்டமன்றத்தில், திமுக மற்றும் முதல்வர் ஆகியோருக்கு இடையேயான வார்த்தை பரிமாற்றங்களில் இருந்த உள் அர்த்தம் எனக்குப் புரியாமல் இல்லை. அது, அடுத்த கட்டத்தை நோக்கி செல்லாமல் தடுப்பது தான் பொதுச் செயலாளர் ஆன என்னுடைய கடமை. குழப்பத்தை ஏற்படுத்த திமுக எடுத்த முயற்சி இது என்பதை நேற்று பேட்டி கொடுத்த ஸ்டாலினின் அளவு கடந்த மகிழ்ச்சி, அதை உண்மை ஆக்கிவிட்டது.

அச்சம் என்பது மடமையடா

அதிமுகவின் விரோதிகள் வரிந்துகட்டி வருகிறார்கள்; துரோகத்தின் வடிவத்திலும் வருகிறார்கள். கழகம் அதற்கு அஞ்சாது. நம் புரட்சித்தலைவர் அவர்கள் சொன்னது போல, அச்சம் என்பது மடமை, அஞ்சாமை திராவிடர் உடமை, ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, நம் தாய் கட்டிக் காத்த கழகத்தைப் பாதுகாப்பது நமது கடமை. துரோகமும், விரோதமும் கைகோர்த்து வந்தாலும் அவை தோற்று ஓடும்; தோற்க வைப்போம் என்று ஆவேசமாக பேசி முடித்தார் சசிகலா.

Article Categories:
அரசியல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *