Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை:-பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை:-பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்த போதிலும் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை. அவ்வப்போது லேசான தூரலுடன் மட்டுமே மழை பெய்து வருகிறது. இந்த மழை வெப்பத்தின் தாக்கத்தை தணித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. அதன்பிறகு லேசான தூரலுடன் விடிய விடிய மழை பெய்தது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது.

கடலோர மாவட்டமான புதுக்கோட்டையில் கன மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாவட்டத்தில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். ஆனால் நேற்று மழை பெய்யாமல் வெயில் அடித்தது. இந்நிலையில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் முதல் லேசான தூரலுடன் மழை பெய்தது.

மாவட்டத்திற்குட்பட்ட அன்னவாசல், இலுப்பூர், ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், நாகுடி, மீமிசல், கோட்டைபட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

வானிலைமையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. கரூர், பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வப்போது லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் நேற்றிரவு கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் ஆறாக ஓடியது. இந்த மழையின் காரணமாக செந்துறை அருகேயுள்ள பெரியகுறிஞ்சியை சேர்ந்த மலர்கொடி என்பவரின் குடிசை வீடும், சொக்கநாத புரத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழை விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

அரியலூர்-25, ஜெயங்கொண்டம்-36, திரு மானூர்-14, செந்துறை-3.

திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குடை பிடித்தப்படி சென்றனர்.

You might also like More from author