திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கு: மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. இதில், அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றிபெற்றார். அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சரவணன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடந்தபோது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சுயநினைவின்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனால், அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போசுக்கு, இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரும் படிவத்தில், கையெழுத்துக்கு பதில், ஜெயலலிதாவின் கை விரல் ரேகை மட்டும் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே, அவர் சுயநினைவுடன் தான் விரல் ரேகையை பதிவு செய்தாரா? என்பது சந்தேகம் உள்ளது. எனவே, ஜெயலலிதாவின் மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ‘அ.தி.மு.க. வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பான படிவத்தில் ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல் ரேகையை பதிவு செய்தது தொடர்பான ஆவணங்களுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வருகிற 24-ந் தேதி நேரில் ஆஜராகவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

You might also like More from author