தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: சென்னையில் ரெயில் – பஸ் நிலையங்கள், வணிக வளாகங்களில் பாதுகாப்பு

ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் எண்ணத்தில் தீவிரவாதிகள் செயல்பட திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

சென்னை மாநகருக்கும் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று முன்தினம் முதல் விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வருகிற 21-ந்தேதி வரை இது அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகங்களான ஸ்பென்சர் பிளாசா, ஸ்கைவாக், எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்ளிட்ட வணிக வளாகங்கள் அனைத்திலும் தனியார் பாதுகாவலர்கள் உஷாராக இருக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் இருக்கிறதா? என்பது பற்றி வணிக வளாகங்களின் பாதுகாவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டையில் 15-ந்தேதி அன்று காலை தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதனையொட்டி மோப்ப நாய் உதவியுடன் அங்கு வெடி குண்டு சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர் முழுவதும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜுகளிலும் சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடியும் வரையில் அமலில் இருக்கும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You might also like More from author