துப்பாக்கி சூடுக்கு வருத்தம் தெரிவித்த கடலோர காவல்படை!

ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, நடுக்கடலில் அவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதில் மீனவர்கள் பிச்சை, ஜான்சன் ஆகியோர் காயமடைந்ததாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டது.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மீனவர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  இதனை ஏற்று மண்டபம் கடலோர போலீசார் கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அத்துடன், துப்பாக்கி சூட்டைக் கண்டித்து மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 800 படகுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. நாளையும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூறியிருந்தனர்.

இதையடுத்து, ராமநாதபுரம் மண்டபம் முகாமில் இன்று கடலோர காவல் படை மற்றும் மீனவர்கள் சங்கங்கள் இடையே பேசுவார்த்தை நடைபெற்றது. இதில், கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது துப்பாக்கி சூடு நடத்திய கடலோர காவல் படை வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், நடந்த சம்பவம் தொடர்பாக மீனவர்களிடம் கடலோர காவல்படை வருத்தம் தெரிவித்ததாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காது என கடலோர காவல்படை உறுதி அளித்ததாகவும், மீனவர்களுடன் நட்பை ஏற்படுத்த மாதந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்த கடலோர காவல்படை முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

கடலோர காவல் படை வருத்தம் தெரிவித்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடக்கும் என மீனவர் சங்கங்கள் கூறியுள்ளன.

You might also like More from author