தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்த புகார்களை விசாரிக்கும் அமைப்புகள் எது?: மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

சென்னை ஐகோர்ட்டில், சரவணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், பங்கேற்றுள்ள நடிகைகள் ஆபாசமான ஆடைகளை அணிந்து காட்சியளிக்கின்றனர். இது தமிழ் கலாசாரத்துக்கு எதிராக உள்ளது’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி குறித்து புகார் வந்தால், அவற்றை விசாரிக்க 2 அமைப்புகள் உள்ளன. ஒன்று, சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான சுயஒழுங்குமுறை விசாரணை கவுன்சில் என்று சொல்லப்படும் ஒளிபரப்பு தொடர்பான புகார்களை விசாரிக்கும் கவுன்சில். மற்றொன்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஆகும். இந்த இரு அமைப்புகளிடம் தான் மனுதாரர் புகார் செய்ய முடியும்’ என்று கூறினார்.

இதையடுத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பான புகார்களை விசாரிக்கும் அமைப்புகள் எவை?, அவற்றின் பணிகள் என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி, மத்திய அரசு வக்கீலான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You might also like More from author