நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மாரடைப்பால் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

சர்வதேச குற்றவாளியான தாவூத் இப்ராகிம் மாரடைப்பு காரணமாக பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மும்பை நகரை பிறப்பிடமாக கொண்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மாரடைப்பால் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடி வருவதாகவும், அவர் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவுதான் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1980களில் மும்பையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் 61 வயதான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம். 1993ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமை கைது செய்யும் பொருட்டு இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

பாகிஸ்தானிடம் உதவி கேட்டும் எந்தவித முன்னேற்றமும் இதுவரை இல்லை. இந்த நிலையில் தாவூத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர் கராச்சி நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வந்த தாவூத் இப்ராஹிம் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்பும் குறைவு என்றும் கூறப்படுகிறது.

தாவூத் இப்ராஹிம் பற்றிய தகவல்களை பாகிஸ்தான் பல ஆண்டுகளாக மறைத்து வந்துள்ளது. மட்டுமின்றி கராச்சியில் 6000 சதுர அடி பங்களாவில் தாவூத் மறைந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தன்னிடம் உள்ள பணத்தை போதை பொருள் கடத்தலுக்கும், ஐஎஸ் தீவிரவாத குழுக்களுக்கும் செலவு செய்து வருகிறார். தீவிரவாதிகளின் பாதுகாப்பு வளையத்திற்குள் மறைந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் இந்த தகவலை மறுத்துள்ளார் தாவூத் இப்ராகிமின் தம்பியும், தேடப்படும் குற்றவாளியுமான சோட்டா ஷகீல். தாவூத் பூரண நலமாக உள்ளதாகவும் செய்தி ஊடகங்களில் வெளியான தகவல் அனைத்தும் வதந்தி எனவும் கூறியுள்ளார்.

You might also like More from author