நீட் தேர்வு வழக்கில் தமிழக அரசு மனு தள்ளுபடி: 85 சதவீத இடஒதுக்கீடு ரத்து செல்லும்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி:

எம்.பி.பி.எஸ்., மற்றும் பல் மருத்துவத்துக்கான பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வுக்காக மத்திய கல்வி வாரியம் மூலம் “நீட் தேர்வு” நடத்தப்பட்டது.

“நீட்” தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெற முயற்சிகள் செய்யப்பட்டது. ஆனால் அதை மத்திய அரசு ஏற்கவில்லை.

இதையடுத்து திட்டமிட்டபடி “நீட்” தேர்வு நடந்தது. அதை எதிர்த்து தமிழக மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டன.

இதைத் தொடர்ந்து மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதற்கான மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னமும் அது நிலுவையில் உள்ளது.

ஜனாதிபதி ஒப்புதல் வழங்க தாமதம் ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடு செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் 85 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவப் படிப்பில் சேர வழிவகை உருவாக்கப்பட்டது.

ஆனால் இதற்கு மத்திய கல்வி வாரிய பாடத்திட்டமான சி.பி.எஸ்.சி.-யில் படித்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 85 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி சி.பி.எஸ்.சி. மாணவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், “தமிழக அரசின் 85 சதவீத உள் இட ஒதுக்கீடு முறை செல்லாது” என்று அறிவித்தனர். அதை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தது.

இதற்கிடையே மருத்துவ கவுன்சிலிங் நடத்த வேண்டிய திருப்பதால் இந்த அப்பீல் வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. அந்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டு விசாரணை நடத்தியது.

விசாரணை முடிந்ததும் இன்று மதியம் 12.30 மணிக்கு சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் உடனடியாக தீர்ப்பை வெளியிட்டனர். 85 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்திருப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “நாடு முழுவதும் மாணவர்களிடம் சமநிலை முறை வேண்டும் என்பதற்காகத்தான் “நீட்” தேர்வு முறை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும், சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டப்படுவதை ஏற்க முடியாது” என்றனர்.

மேலும், “மாணவர்கள் நலன் கருதி 85 சதவீத ஒதுக்கீடு அறிவிப்பை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்ததை வரவேற்கிறோம். அந்த ரத்து செல்லும். எனவே தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்கிறோம்“ என்றும் அறிவித்தனர்.

இந்த ஆண்டு நடந்த “நீட்” தேர்வை செல்லாது என்று அறிவிக்கக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. இன்று 85 சதவீத இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உறுதிபடுத்தி விட்டது.

எனவே தமிழ்நாட்டில் இனி மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் “நீட்” தேர்வு அடிப்படையில் விரைவில் தொடங்கும்.

இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில்,

தமிழக மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்ததை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது,

இதற்கிடையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற மத்திய அரசிடம் தமிழக அரசு ஏற்கனவே அழுத்தம் கொடுத்துள்ளது. இதனால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து இன்று அல்லது நாளைக்குள் முடிவு தெரிந்து விடும். அதனால் அடுத்த வாரம் மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்படும் என்றனர்.

You might also like More from author