பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது – நிதி மந்திரி அருண்ஜெட்லி பேச்சு

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள பன்னாட்டு நிதியத்தின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நிதி மந்திரி அருண்ஜெட்லி அமெரிக்காவில் ஒரு வாரம் பயணம் மேற்கொள்கிறார். இன்று அவர் அமெரிக்கா சென்றடைகிறார்.

தனது அமெரிக்க வருகைக்கு முன்னதாக அவர் பெர்க்லி நகர இந்தியர்கள் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூய்மை இந்தியா இயக்கம், சரக்கு, சேவை வரி விதிப்பு(ஜி.எஸ்.டி.), பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்கு அவ்வளவாக பலன் இல்லை என்று கூறப்படுவதை ஏற்கமாட்டேன். இந்த மூன்றிலும் நல்ல விளைவுகள் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக பணமதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி.யும் எதிர்பார்த்த அளவிற்கு பொருளாதாரத்திற்கு பலனை தந்துள்ளன. இதுவரை இல்லாத அளவிற்கு நாட்டின் வரி வருவாய் அதிகரித்து இருக்கிறது.

இந்திய பொருளாதாரம் மீண்டும் தனது வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த வளர்ச்சி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் விதத்தில் எழுச்சி காணும். ஏனென்றால் நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமின்றி, இளைய தலைமுறையினருக்கும் சேவை செய்யவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் காஷ்மீரிலும், சத்தீஷ்காரிலும் பயங்கரவாத செயல்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நடந்த கல்வீச்சு சம்பவங்கள் நின்றுவிட்டன. அங்கு கல்வீச்சில் ஈடுபட 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேருக்கு பயங்கரவாத அமைப்புகள் நிதி உதவி செய்தன. ஆனால் கடந்த 8 முதல் 10 மாதங்களில் காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் ஏன் நிகழவில்லை?… காரணம் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பது நின்றுபோனதுதான்.

தூய்மை இந்தியா திட்டத்தை பொறுத்தவரை தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது முதல் முறையாக ஒரு இயக்கமாக கொண்டு வரப்பட்டு உள்ளது. அதிலும் எதிர்பார்த்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like More from author