பாகிஸ்தானில் சர்வதேச போட்டி நடப்பது கிரிக்கெட் விளையாட்டிற்கு நல்லது: ஐசிசி கருத்து

துபாய்

உலக லெவன்-பாகிஸ்தான் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. 2-வது போட்டி நாளையும், 3-வது மற்றும் கடைசி போட்டி 15-ம் தேதியும் அரங்கேறுகிறது.

மூன்று போட்டிகளும் லாகூர் கடாபி மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. பாகிஸ்தான் மண்ணில் மீண்டும், சர்வதேச கிரிக்கெட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக இந்த தொடர் நடத்தப்படுகிறது.

கடந்த 8 ஆண்டு கால அளவில், பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் முதல் முக்கியமான தொடர் இதுவே. இதற்காக லாகூரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது பாகிஸ்தானில் உலக லெவன் தொடர் நடைபெற, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பெரிதும் உதவி செய்துள்ளது. இது குறித்து ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,

‘’உலக லெவன் போட்டியை லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடத்துவது, உலக கிரிக்கெட்டிற்கு நல்ல நாள். இது பிசிபியின் நீண்ட மற்றும் கடினமான பயணம்.

தங்கள் சொந்த நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்கும், விளையாடுவதற்கும் வாய்ப்பு கிடைக்காமல், பாகிஸ்தான் ரசிகர்களும், வீரர்களும் வாடி வந்தனர். பாகிஸ்தானில் ஒரு சர்வதேச போட்டி நடைபெறுவது என்பது கிரிக்கெட் விளையாட்டிற்கும் நல்லதுதான்.

இரு அணிகளுக்கும், பிசிபிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்’’ என கூறியுள்ளார். சஷாங்க் மனோகர் இந்தியாவை சேர்ந்தவர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com