பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தீபா மாலிக்கிற்கு எம்.ஜி.மேத்தா விருது அறிவிப்பு

புதுடெல்லி:
ரத்னா நிதி என்ற அறக்கட்டளை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு எம்.ஜி.மேத்தா பெயரில் விருது அளித்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ‘பாராலிம்பிக்’ தொடரின் பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற தீபா மாலிக்கிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் பாராலிம்பிக்கில் பதக்கம் பெறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை தீபா மாலிக் பெற்று சாதனை படைத்தார். அவரது சாதனையை பாராட்டும் வகையில் அவருக்கு எம்.ஜி.மேத்தா விருது அறிவிக்கப்பட்டுள்ளது என ரத்னா நிதி அறக்கட்டளை நிர்வாகி ராஜீவ் மேத்தா தெரிவித்தார்.
இதுகுறித்து மாலிக் கூறுகையில், ‘இந்த விருதை பெறுவதற்காக ஆவலோடு இருக்கிறேன். ரத்னா நிதி அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகளுக்காக உலக அளவில் பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. அதன் நிறுவனர் மகேந்திரபாய் மேத்தா ஒரு கலங்கரை விளக்கம் போன்றவர். அவரது நினைவாக வழங்கப்படும் இந்த விருது முற்றிலும் விலைமதிப்பற்றது” என கூறினார்.
நவம்பர் 21-ம் தேதி மும்பையில் உள்ள ஒய்.பி.சவான் கலையரங்கத்தில் நடைபெறும் விழாவில் மாலிக்கிற்கு விருதும், ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.

You might also like More from author