பாலியல் பலாத்கார வழக்கில் அமைச்சருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதியை பணியிடை நீக்கம்

பாலியல் பலாத்கார வழக்கில் உத்தரபிரதேச முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு ஜாமீன் வழங்கிய லக்னோ நீதிமன்ற நீதிபதியை அலகாபாத் உயர்நீதிமன்றம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான முந்தைய அரசில் அமைச்சராக இருந்தவர் காயத்ரி பிரஜாபதி.

இவரும் இவரது சகாக்கள் சிலரும் கடந்த 2014 ஆம் ஆண்டு 35 வயது பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததாகவும் அவரது மகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த மார்ச் 15-ம் திகதி பிரஜாபதி கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் காயத்ரி பிரஜாபதி மற்றும் அவருடைய சகாக்களுக்கு பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் (போஸ்கோ) நீதிமன்ற நீதிபதி ஒம் பிரகாஷ் மிஸ்ரா கடந்த செவ்வாய் கிழமை ஜாமீன் வழங்கினார்.

இந்த உத்தரவை ரத்து செய்யும்படி அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் காயத்ரி பிரஜாபதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

மட்டுமின்றி பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதியை அலகாபாத் உயர்நீதிமன்றம் பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளது.

You might also like More from author