Dec 15, 2016
21 Views
0 0

‘பிச்சை எடுத்த சிறுமியை வழக்கறிஞர் ஆக்கிய ஜெயலலிதா!’ நெகிழும் மைசூர் பெண்

Written by
banner

, அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சையும் பலன் அளிக்காமல் டிசம்பர் 5-ம் தேதி காலமானார். மறைந்தாலும், ‘புரட்சித்தலைவி’, ‘இரும்புப் பெண்’ என வரலாற்றின் புகழுரைகளிலும், தமிழக மக்கள் மனதில் ‘அம்மா’ என்ற சொல்லின் அன்பிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

ஜெயலலிதா கொண்டுவந்த நலத்திட்டங்கள் பற்றி பலரும் அறிவர். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் பிரியம் காட்டிய எளிய மனிதர்கள் பற்றி பரவலாக அறியப்படவில்லை. அப்படி ஒருவர்தான், நாகரத்னா!

கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்த சிறுமி நாகரத்னா, நகர வீதிகளில் பிச்சை எடுத்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். ஆனால், அவருக்கு படிக்க ஆசை. பிச்சை எடுத்துக்கொண்டே படித்தார். இருக்க வீடு கூட இல்லாத நிலையிலும், தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்து, 2001-ம் ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார் நாகரத்னா. அதற்கு மேல் படிக்க இயலாத அவரின் நிலைமை, தினமணி நாளிதழில் செய்தியாக வெளியானது.

இந்தச் செய்தியை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா படித்து அறிந்ததும், மனம் நெகிழ்ந்து, உடனடியாக கர்நாடக மாநில அதிமுக  செயலாளர்  புகழேந்தியை அழைத்து, அது பற்றி விசாரித்தார். மைசூருக்கு விரைந்த புகழேந்தி, அங்கு நாகரத்தினாவைத் தேடிக் கண்டுபிடித்தார்.

‘புகழேந்தி என்னைச் சந்தித்து,  ‘உனக்கு ஜெயலலிதாவைத் தெரியுமா?’ என்று கேட்டார். ‘ம்… தெரியுமே. தமிழகத்தின் முதல்வர்’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘ஜெயலலிதா அம்மா உன்னைப் பார்க்க விரும்புகிறார். உடனே புறப்படு’ என்றார். எனக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. மறுநாள் நாங்கள் முதல்வரைச் சந்தித்தோம்’ என்று சொல்லும்போது நாகரத்னாவுக்கு, முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க வாய்ப்பு அமைந்தபோது, அவரிடம் தன் கஷ்டங்களை எல்லாம் தெரிவித்தார். அவரிடம் ஒரு லட்சத்துக்கான காசோலையைக் கொடுத்த ஜெயலலிதா, அவரைப் படிப்பைத் தொடரச் சொல்லி வாழ்த்தினார்.

‘அம்மாவுக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் வரவில்லை. என் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்த அம்மா, ‘நன்றாகப் படி’ என தைரியம் ஊட்டினார்’ என்று சொல்லும் நாகரத்னா, லட்ச ரூபாய்க்கான காசோலையை வங்கியில் ஃபிக்ஸட் டெப்பாசிட் செய்து அதில் வரும் வட்டியில் படிப்பைத் தொடர்ந்தார்.

மைசூரில் உள்ள மஹாஜனாஸ் சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி.படிப்பை முடித்து, தற்போது பெங்களூருவில் உள்ள சிவில் கோர்ட்டில் வழக்குரைஞராகப் பணியாற்றுகிறார் நாகரத்னா. ‘பிச்சை எடுத்த நான் இன்று வழக்குரைஞர் ஆகியிருப்பதற்கு ஜெயலலிதா அம்மாதான் காரணம். அவருக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை. அம்மாவை மீண்டும் ஒருமுறை எப்படியாவது நேரில் சந்தித்து நன்றி சொல்லிவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தேன். ஆனால், அவரின் இறப்புச் செய்தி கேட்டு என் இதயமே வெடித்ததுபோல் ஆகிவிட்டது’ என்று நாகரத்னா கண்ணீர் மல்க இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தெரிவித்திருக்கிறார்.

நாம் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியை தொடர்புகொண்டு பேசினோம். அந்த நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

”நாகரத்னாவுக்கு அம்மா உதவி செய்தது உண்மைதான். 2001-ம் ஆண்டு அம்மா தமிழக முதல்வராக பதவி ஏற்றிருந்த தருணம் அது. அன்று அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. உடனே போயஸ் கார்டனுக்குச் சென்றேன். ‘தினமணி படித்தீர்களா?’ என்று கேட்டார். ‘இல்லை, நீங்கள் கூப்பிட்டதும் உடனே புறப்பட்டு வந்துவிட்டேன்’ என்றேன். ‘சரி, மைசூரில் இருக்கும் ஒரு பெண் பிச்சை எடுத்துக்கொண்டே 10-ம் வகுப்புத் தேர்வில் டிஸ்டிங்ஷனில் தேர்வாகியுள்ளார். அதை உறுதிப்படுத்தி, அவளை உடனே இங்கே அழைத்து வாருங்கள்’ என்றார்.

மைசூர் சென்று நாகரத்னாவைப் பற்றி விசாரித்தேன்.  நாகரத்னாவைப் பற்றிய செய்தியைப் பார்த்து, அங்குள்ள ஒரு கிருத்துவ தொண்டு நிறுவனம் அவரை அழைத்துச் சென்றிருப்பதை தெரிந்துகொண்டு அங்கு சென்றேன். நாகரத்னாவைப் பார்த்து விபரத்தைச் சொல்லி, அம்மாவிடம் அழைத்துவந்தேன்.

நாகரத்னாவைப் பாராட்டிய அம்மா, ‘நீ மேற்கொண்டு என்ன படிக்கப்போகிறாய்?’ என்று கேட்டார். ‘நான் போலீஸ் ஆஃபீஸர் ஆக விரும்புகிறேன்’ என்றார். ‘ஏன்?’ என அம்மா கேட்க, ‘நான் தெருவிளக்கில்தான் படித்தேன். அப்படிப் படித்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள் போலீஸ் என்னை அடித்துவிட்டது’ என்று சொல்லி தன் கால் தழும்புகளை அம்மாவிடம் காட்டினார்.  ‘சரி, என்ன உதவி வேண்டும் என்றாலும் கேள்’ என்று சொல்லி, ஒரு லட்சத்துக்கான காசோலையை நாகரத்னாவிடம் தந்தார் அம்மா. அப்போது ஒரு லட்சம் என்பது பெரிய தொகை. நான் நாகரத்னாவின் பெயரில் அதை வங்கியில் டெபாசிட் செய்து ரசீதை அம்மாவிடம் கொடுத்துவிட்டேன்.

 

இப்போது பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் ப்ராக்டிஸ் செய்கிறார் நாகரத்னா. அம்மா காலமானதும்,  நாகரத்னாவுக்கு அம்மா உதவி செய்ததை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டேன். பெங்களூருவில் நாகரத்னாவுடன் பிரஸ் ஏற்பாடு செய்திருந்தேன். அப்போது பத்திரிகையாளர்கள் நாகரத்னாவை பார்த்து, ‘நீங்கள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் பார்த்தீர்களா? அவர் என்ன சொன்னார்?’ என்று கேட்டனர். அதற்கு நாகரத்னா, ‘முதலமைச்சர் யாரையும் நான் பார்க்கவில்லை’ என்றார். இதைக் கேட்ட எனக்கு ‘பக்’ என்று ஆகிவிட்டது. பிறகு நாகரத்னா, ‘எனக்கு அவர் முதலமைச்சராகத் தெரியவில்லை அப்போது என் கண்களுக்கு தெய்வமாகத்தான் தெரிந்தார். பிச்சை எடுத்துக்கொண்டிருந்த என் வாழ்க்கைக்கு வழிகாட்டிய தெய்வம் அம்மா’ என்று கண்களில் நீர்வடிய தெரிவித்தார். பெங்களூர் நியூஸ் சேனல்களிலும் எங்கள் இருவரின் பேட்டி வெளியானது” என்றார் புகழேந்தி.

‘அம்மா’ என்றால் அன்பு!

Article Categories:
தமிழகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *