பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தார் – புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

லக்னோ:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதன்முறையாக, இன்று 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தார். சிறப்பு விமானம் மூலம் வந்த அவரை உ.பி. மாநில ஆளுநர் ஸ்ரீராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முக்கிய தலைவர்கள் வரவேற்றனர்.
முதல் வேலையாக படா லால்பூரில் கைவினைப் பொருட்களுக்காக 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீன்தயாள் ஹஸ்தகலா சன்குல் அருங்காட்சியக கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன்பின்னர், வாரணாசியில் இருந்து குஜராத் மாநிலத்தின் வதோதரா வரை இயக்கப்பட உள்ள மூன்றாவது மஹாமனா விரைவு ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதோடு அப்பகுதியில் சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் நிறைவடைந்துள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு நலத்திட்ட பணிகளின்கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது 17 புதிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, டாக்டர் அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது, “பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திவரும் மாநில அரசை பாராட்டுகிறேன். முன்னர் அறிவிக்கப்பட்டு காலம் முடிந்த திட்டங்களை முடிப்பதற்காக கையில் எடுத்துள்ள முதல்வர் யோகி ஆதித்யாநாத்தையும் பாராட்டுகிறேன். 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கைவினைப் பொருட்களுக்கான கட்டிடம், சிறிய கலைஞர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த அருங்காட்சியகம் வாரணாசிக்கு சுற்றுலா பயணிகள் வரவையும் அதிகரிக்கும். இது பொருளாதார நடவடிக்கைகளுக்கான ஒரு புதிய மையமாக இருக்கும். வாரணாசி மற்றும் வதோதரா நகரங்களை மஹாமனா ரெயில் திட்டத்தின் மூலம் இணைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பேசினார்.
மேலும் வறுமை ஒழிப்பு குறித்து பேசிய அவர், அனைத்து பிரச்சனைகளையும் நாட்டு முன்னேற்றத்தின் மூலம் சரிசெய்துவிடலாம் என கூறினார். இறுதியாக கடந்த ஆறு மாதத்தில் மாநிலத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பாராட்டி தனது உரையை நிறைவு செய்தார்.

You might also like More from author